முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்து இன்று (25) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இரங்கல் பிரேரணை!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்;;;;த இரங்கல் பிரேரணையை கௌரவ சபையில் முன்வைக்கிறேன்.
லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்த பெடி வீரகோன் அவர்கள், கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றவர். லக்ஷ்மன் கதிர்காமரின் சமகாலத்தவராவார். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இடதுசாரி அரசியலுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர் 1953 ஹர்த்தாலி; பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து இணைந்து தனது புரட்சிகர அரசியலை வெளிப்படுத்தினார்.
லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து என்.எம். கொல்வின், லெஸ்லி, பெர்னாட் சொய்சா போன்ற இடதுசாரி பிரமுகர்களுடன் அரசியலில் ஈடுபட்டார்.
இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் அதேபோன்று லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இடதுசாரி அரசியலில் அவர் முன்னெடுத்த முற்போக்குப் போராட்டங்கள் இன்றும் முன்னுதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவான பெடி வீரகோன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் கடமையாற்றினார்.
இடதுசாரி செயற்பாட்டாளரும், தொழிற்சங்கவாதியும், சட்டத்தரணியுமான பெடி வீரகோன், தனது பரபரப்பான வாழ்க்கையில் புத்தகங்களை எழுதுவதற்கும் தனது நேரத்தை செலவிட்டார். அவரது படைப்புகளில் ஏராளமான இலக்கியப் படைப்புகள் மற்றும் சட்டத் துறை தொடர்பான புத்தகங்கள் உள்ளடங்கும்.
அவர் தொழிலாளர் மற்றும் அரசியல் போராட்டங்களிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களிலும் ஒரு முக்கிய நபராக விளங்கினார்.
2019ஆம் ஆண்டு காலமான திரு.பெடி வீரகோன் அவர்கள் இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தையும் தொழிற்சங்க இயக்கத்தையும் வலுப்படுத்தும் முயற்சியில் எப்போதும் சிறந்து விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.செல்லசாமி அவர்கள் 1989 பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அந்த அரசாங்கத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், பின்னர் தொழில் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர் 2007 ஆம் ஆண்டு முதல் தபால் பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
செல்லசாமி அவர்கள் 1963 ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்த பல தொழிற்சங்கங்களிலும் பல்வேறு பதவிகளை வகித்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெரும் சேவையாற்றியிருப்பதை நாம் அறிவோம்.
கொழும்பு செனட் சபையின் உறுப்பினராகவும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையின் நிறைவேற்று உறுப்பினராகவும் பணியாற்றிய சிரேஷ்ட அரசியல்வாதி எனவும் இவரை குறிப்பிடலாம்.
செல்லசாமி அவர்கள் 2020 இல் காலமானார். அவர் உயிரிழக்கும் வரை நீண்ட காலம் மக்களுக்காக உழைத்தார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
1988 ஆம் ஆண்டு தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜஸ்டின் கலப்பத்தி அந்த மாகாண சபையில் உள்ளூராட்சி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கடமையாற்றினார்.
2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் போது அவர் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.
மாத்தறை புனித சர்வேசியஸ் கல்லூரி மற்றும் காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்றுள்ளார்.
ஜஸ்டின் கலப்பத்தி அவர்கள், ஆலயங்கள், பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்பதை நாம் அறிவோம்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்த அவர் 2019ஆம் ஆண்டு காலமானார்.
தங்கேஸ்வரி கதிராமன் அவர்கள் 2004 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் கலாசார உத்தியோகத்தராகவும் சேவையாற்றியுள்ளார். அவர் ஒரு எழுத்தாளர் என்பதையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக இந்து மதம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும் இந்து சமய கலாசார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாணவர்களின் கல்வி அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தினார். 2011ஆம் ஆண்டு மண்முனைப் பிரதேசம் புதிய கல்விப் பிரிவாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பது தங்கேஸ்வரி கதிராமன் அவர்களின் வேண்டுகோள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 2019 ஆம் ஆண்டு காலமானார். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையை இங்கு நினைவுகூர வேண்டும்.
நான் குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மறைவால் துயருறும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மற்றும் அரசாங்கத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் ஊடக பிரிவு