திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ராசிபுரத்தில் மகேஸ்வரன்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில், 2 ஆண் குழந்தைகள் குழந்தை உள்ளனர். இதில், இரண்டாவது ஆண் குழந்தை ராகுல் பிறந்து நான்கு மாதங்களே ஆகிறது.
இந்த நிலையில் தம்பதியினரிடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி குழந்தை ராகுலை வீட்டில் தூங்க வைத்துவிட்டு இயற்கை உபாதைகளை லதா வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்த போது குழந்தை காணாமல் போயிருந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு குழந்தையை தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அருகில் இருந்த பாலாற்றில் செடிகளுக்கு மத்தியில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குழந்தை இறப்புக்கான காரணத்தை கண்டறிவதில் குழப்பம் ஏற்பட்டு நிலையில், தாய் லதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் மீது சந்தேகம் எழுந்ததால், அவரிடம் நடத்திய விசாரணையில் லதா அளித்த வாக்குமூலம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறந்தது முதலே உடல்நிலை கோளாறுகள், மனக்கஷ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் ஜாதகத்தில் குழந்தையின் நேரம் சரியில்லை என்று குழந்தையை ஆற்றில் வீசி விட்டதாக லதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர் பெற்ற குழந்தையைக் கொன்ற தாய் கைது செய்து சிறையில் அடைத்தனர்.