சென்னை:
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மவுண்ட் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் போரூர் ஏரி சிவன் கோவில் சந்திப்பில் இருந்து குமணன் சாவடி சந்திப்பு வரை சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிக்காக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பில் இருந்து குமணன் சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில், இலகுரக வாகனங்கள் செல்லவும், மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களுக்கு விலக்கு அளித்து அவ்வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
போரூரில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் பூந்தமல்லி மற்றும் குமணன் சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு- பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி, சவீதா பல் மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன் சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும்.
சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவீதா, பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன் சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமனை ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி, வேலப்பன் சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடது புறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பொதுமக்களது ஆலோசனைகளை ஆவடி காவல் ஆணையரகத்தின் டுவிட்டர் http://twitter.com/avadipolice அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.