பெங்களூரு: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு எதிராக, கர்நாடக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21-ம்தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தகர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,‘தமிழக அரசின் தீர்மானம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகாவுக்கு எதிரான தீர்மானம் சட்ட விரோதமானது’ என விமர்சித்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்சித்தராமையா கூறும்போது, ‘‘மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, கர்நாடக பேரவையிலும் தமிழகத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
கடந்த புதன்கிழமை நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏஎச்.கே.பாட்டீல், பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் தமிழக அரசின் தீர்மானத்தைக் கண்டித்துப் பேசினர்.
ஒருமனதாக நிறைவேற்றம்
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று, தமிழகத்தின் தீர்மானத்தைக் கண்டித்தும், மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி என வலியுறுத்தியும் ஒருமனதாகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரும், கூடுதலாக உபரி நீரும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்டநீரைக் கொண்டு கூட்டுக் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி திட்டம் நிறைவேற்றுவதற்காகவே மேகேதாட்டுவில் அணை கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகரில் கன்னடர்கள் மட்டுமல்லாமல் பல மொழிகளைப் பேசும் மக்களும் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீருக்காக இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இந்தத் திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
கர்நாடகாவின் நில மற்றும் நீர் உரிமையை பாதுகாக்கும் வகையில் மேகேதாட்டு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இதற்கு மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். ஏற்கெனவே எடுத்த முடிவின்படி, விரைவில் அனைத்துக்கட்சி குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பேசினர். இதைத் தொடர்ந்து,தீர்மானம் ஒருமனதாக நிறைவேறிய தாக அறிவிக்கப்பட்டது.