கீவ்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிகின்றன. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் ஒருமாதம் கடந்து விட்டாலும் கூட இன்னும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் நோக்கில் ரஷியா தனது தாக்குதலை தொடுத்து வருகிறது.
ஆனால், உக்ரைன் படைகள் கடும் சவால் அளிப்பதால், ரஷியாவில் இன்னும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. உக்ரைனின் பலநகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இவற்றில் முக்கியமான நகரங்களில் ஒன்று மரியோபோல் ஆகும்.ஏனெனில், இந்நகரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் ஒன்று உள்ளது.
மரியுபோல் நகரில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வழிபாட்டு தலங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், தியேட்டர்கள் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில், மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரஷிய படைகள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 300- பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேரில் கண்டவர்கள் அளித்த தகவலின் படி, டிராமா தியேட்டரில் 300 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல்கள் வருவதாக மரியுபோல் சிட்டி ஹால் தரப்பில் டெலகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.