ரஷ்யாவிடம் இருப்பது "அப்பளம்" அல்ல.. அதி பயங்கர அணு ஆயுதங்கள்.. மிரளும் அமெரிக்கா!

ரஷ்யாவிடம் 6255 அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவிடம் கூட இந்த அளவுக்கு அணு ஆயுதங்கள் இல்லை. ஏதோ ஒரு கோபத்தில் புடின் அதிரடி உத்தரவிட்டு அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி விட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அழிந்து போய் விடும் அபாயம் உள்ளது. இதனால்தான் அமெரிக்காவும் சரி, ஐரோப்பிய நாடுகளும் சரி ரொம்பவே அடக்கி வாசிக்கின்றன. பொறுமை காக்கின்றன.

உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுறுவும், அதிரடித் தாக்குதல் நடத்தும், அந்த நாட்டை நிர்மூலமாக்கும் என்பதை
அமெரிக்கா
ஏற்கனவே ஊகித்து வந்தது. ஐரோப்பிய நாடுகளும் கூட இதை எதிர்பார்த்திருந்தன. அதேபோலத்தான் தற்போது ரஷ்யா தனது அதிரடித் தாக்குதலை தொடர்ந்து கொண்டுள்ளது.

ஆனால் ரஷ்யா நினைத்தது போல இந்த போர் எளிதாக இல்லை. உக்ரைன் கடுமையாக எதிர்த் தாக்குதல் நடத்துகிறது. மிகத் திறமையாக தாக்குப் பிடிக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொடுத்துள்ள ஆயுதங்களை வைத்து திறம்பட ரஷ்யப் படையினரின் தாக்குதலை முறியடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகளும் ஆங்காங்கு சில ஊர்களைப் பிடித்துள்ளதே தவிர பெரிய அளவில் எந்த பெருநகரத்தையும் இதுவரை பிடிக்க முடியவில்லை.

ஆயுதங்களை அளவில்லாமல் அள்ளிக் கொடுங்க.. நேட்டோவுக்கு உக்ரைன் கோரிக்கை

ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது போர் தொடங்கி. இன்னும் ஒரு பெரிய வெற்றியைப் பெற முடியாமல் ரஷ்யப் படைகள் தத்தளித்துக் கொண்டிருப்பது ரஷ்ய அதிபர் புடினுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். இதேபோல நிலைமை நீடித்தால், உக்ரைனை முழுமையாக வெல்லமுடியாத நிலை ஏற்பட்டால் அது ரஷ்யாவுக்கு பெரும் தோல்வியாகவும், அவமானமாகவும் ஆக மாறி விடும். அது புடினுக்கு எதிராக ரஷ்யர்களே பொங்கி எழும் நிலைக்குத் தள்ளி விட்டு விடும்.

பாம்பின் கால் பாம்பறியும்

இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை நிச்சயம் புடின் விரும்ப மாட்டார். உக்ரைனை வெற்றி கொள்வது மட்டுமே பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதை மற்ற எல்லோரையும் விட புடின் நன்றாக உணர்ந்துள்ளார். எனவே அவர் உக்ரைனை வெற்றி கொள்ள எல்லா வழிகளையும் பின்பற்ற தயங்க மாட்டார்.. அதில் ஒன்றுதான் அணு ஆயுத பயன்பாடு. கடைசி கட்டமாக அணு ஆயுதத்தைத்தான் புடின் நாடுவார் என்பது அமெரிக்காவின் கணிப்பாகும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும் என்றும் அமெரிக்கா அஞ்சுகிறது.

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். அந்த வகையில் ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுத அபாயங்கள் குறித்து அதை ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தி உலகத்தை துயரத்தில் ஆழ்த்திய அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் அமெரிக்கா மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. சரி ரஷ்யாவால் அப்படி என்னதான் செய்து விட முடியும்.. ஒரு வேளை அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் அருகாமையில் உள்ள ரஷ்யாவுக்கும்தானே பாதிப்பு ஏற்படும். பிறகு எப்படி ரஷ்யா அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் என்ற எதிர் கேள்வியும் கேட்கப்படுகிறது.

இனி இந்தியா, ரஷ்யா, சீனாதான்.. அமெரிக்கா இல்லை.. ஆச்சரியப்படுத்தும் அசுர வளர்ச்சி!

ஆனால் ரஷ்யாவுக்கு பெரிதாக பாதிப்பு வராத வகையில் சிறிய அளவிலான அணு ஆயுதத்தை புடின் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில், அதாவது உக்ரைனுக்குள் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அணு ஆயுதங்களை புடின் பயன்படுத்தலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

குறி வைத்து அடிக்கலாம்

ரஷ்யாவிடம் 6255 அணு ஆயுதங்கள் இருப்பதாக ஸ்டாக்ஹோமில் உள்ள சிப்ரி எனப்படும் அமைதிக்கான ஆய்வுக் கழகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அணு ஆயுதங்கள் இல்லை. உக்ரைனில் அணு ஆயுதங்கள் வீசப்பட்டால் அது உக்ரைனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பூமியையும் பாதிக்கும் என்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் புடின் அப்படியெல்லாம் செய்ய மாட்டார். குறிப்பிட்ட பிராந்தியத்தை மட்டும் குறி வைத்து அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை ரஷ்யாவிடம் உண்டு. அதைத்தான் புடின் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அப்படிச் செய்யும்போது ஐரோப்பா முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் எழ வாய்ப்பில்லை. உதாரணத்திற்கு, கீவ் நகரை தன் வசப்படுத்த அந்த நகருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி முடக்கிப் போடும் வகையில் அணு குண்டுகள் வீசப்படலாம். அதில் அந்த நகரம் அழியும். அதேசமயம், அந்த நகருக்கு வெளியே பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

ரஷ்யா வீழ்ந்தால்.. இந்தியா சீனா அமெரிக்கா கை கோர்க்குமா?.. சாமி எழுப்பும் கேள்வி!

மக்களை வெளியேற்றி விட்டு, மக்கள் முழுமையாக வெளியேற வழி ஏற்படுத்தி விட்டு பிறகே அணுகுண்டுகளை ரஷ்யா வீசும் என்று தெரிகிறது. ரஷ்யாவின் ஒரே நோக்கம் உக்ரைனை தன் வசப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே. உக்ரைன் மக்களின் உயிரைப் பறிக்க ரஷ்யா ஒருபோதும் நினைக்கவில்லை. அந்த நோக்கத்தில்தான் தற்போது கூட பெரிய அளவில் விமானம் மூலம் அது குண்டுகளை வீசாமல் ராணுவத்தை மட்டும் அதிகம் பயன்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.

சின்னச் சின்ன குண்டுகள்

சிறிய ரக அணுகுண்டுகள் விதம் விதமான டிசைனில் உள்ளனவாம். அந்த சைசுக்கேற்ப பாதிப்பும் வேறுபடும்.

தரையில் விழுந்து வெடிக்க வைக்கும் வகையிலும், வானிலேயே வெடிக்கும் வகையிலும் என விதம் விதமான அணுகுண்டுகளும் உள்ளன. அணு குண்டுகளை ரஷ்யா பயன்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கியக் காரணமே, உக்ரைன் படையினரின் ஒற்றுமை மற்றும் வலிமையைக் குலைக்கும் நோக்கில்தான். அப்படிச் செய்தால் உக்ரைன் படையினர் சிதறி ஓடுவார்கள். ரஷ்யப்படையினரின் முன்னேற்றம் எளிதாகும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், சேதத்தைப் பார்த்து பயந்து பணிவார் என்பதே ரஷ்யா போடும் கணக்காகும்.

ரஷ்யா எந்த வகையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து ரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வாளர் பாவெல் லுசின் கூறுகையில், முதலில் கடல் பகுதியில் அணு ஆயுதங்களை ரஷ்யா வீசலாம் அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீசலாம். இதன் மூலம் உக்ரைன் படையினரை ரஷ்யா அச்சுறுத்த முயலலாம். இதற்கும் உக்ரைன் படையினர் பணிய மறுத்தால், நேரடியாக வீரர்கள் மீதே அணுகுண்டுகளை ரஷ்யா வீசும் என்று அவர் கூறுகிறார்.

ரஷ்யாவை அழிக்க நினைத்தால்.. அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்.. கிரம்ளின் அறிவிப்பு

அமெரிக்க புலனாய்வுத்துறையில் பணியாற்றிய கிறிஸ்டோபர் சிவ்விஸ் கூறுகையில் இந்தப் போர் முடிய 2 வழிதான் இருக்கிறது. ஒன்று அணு ஆயுதம் இல்லாமலேயே போரை முடிவுக்கு கொண்டு வருவது. இன்னொன்று வீழ்ச்சி அடைந்த உக்ரைனில் நிலவப் போகும் மயான அமைதி.. இதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார் கிறிஸ்டோபர்.

வேதி ஆயுதங்கள்

இன்னொரு பக்கம் வேதி மற்றும் உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா திட்டமிடுவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை ஆய்வாளர் மத்தியு போலிக் கூறுகையில், வேதி ஆயுதங்களால் போரின் போக்கை மாற்றி விட முடியாது. ஆனால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் உக்ரைனை தரைமட்டமாக்கி விட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

“ஹைபர்சானிக்”கை கையில் எடுத்த ரஷ்யா.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. புடின் செம கேம்!

எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும் சரி, போரில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, புடினுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் காத்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடியை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை நாளை உக்ரைனை அவர் கைப்பற்றி விட்டாலும் கூட அந்த நாட்டு மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்றும் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.