ரஷ்யா – உக்ரைன் போர்: இதுவரை நடந்தது என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்கிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் பல நகரங்களில் ஏவுகணை, பீரங்கி தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தாலும் உக்ரைனின் ஒரு நகரை (கெர்சன்) தவிர எந்த பகுதியையும் முழுமையாக கைப்பற்றவில்லை.

இதுவரை..

2022 பிப். 24: உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்பால் ரஷ்ய பங்கு சந்தை 45 சதவீதம் சரிவை சந்தித்தது.
பிப். 26: சர்வதேச நிதி தகவல் சேவை (ஸ்விப்ட்) இருந்து ரஷ்யாவின் சில வங்கிகளை ஐரோப்பிய யூனியன் நீக்கியது.
பிப். 27: ரஷ்ய விமானங்கள் தங்கள் எல்லையில் பறக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடை.
* உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சன் நகரங்களை நோக்கி ரஷ்ய படை முன்னேறியது.
பிப். 28: ஐரோப்பிய யூனியனில் சேர்வதற்கு உக்ரைன் விண்ணப்பம். போரை நிறுத்துவதற்கு உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்.
மார்ச் 1: உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற 65 கி.மீ., துாரத்துக்கு ரஷ்ய படைகள் அணிவகுத்தன. கார்கிவ், மேரிபோல், கெர்சன் நகரில் தாக்குதல் தீவிரம்.
* உக்ரைனின் கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய படையின் தாக்குதலால், உலகின் பெரிய சரக்கு விமானம் அழிக்கப்பட்டது.
* ரஷ்ய படை நடத்திய தாக்குதலில் கார்கிவ் நகரில் இந்திய மாணவர் பலி.
* ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வழியை பயன்படுத்த தடை.
* உக்ரைன் பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ‘கிளஸ்டர்’ குண்டுகளை பயன்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
மார்ச் 2: கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது.
மார்ச் 3: போர் குற்றங்களில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை துவக்கியது.
மார்ச் 4: டுவிட்டர், பேஸ்புக், பி.பி.சி., வலைதளங்களுக்கு ரஷ்யாவில் தடை. ரஷ்ய ராணுவம் குறித்து பொய் செய்தி பரப்பினால் 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தில் அதிபர் புடின் கையெழுத்து.

மார்ச் 5: ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு.
மார்ச் 7: கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 139.13 அமெரிக்க டாலராக (ரூ. 10,629) உயர்வு.
மார்ச் 8: நேட்டோவுடன் இணைய விருப்பமில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.
மார்ச் 8: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை.
மார்ச் 9: உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ. 10 ஆயிரம் கோடி வழங்க ஐ.எம்.எப்., அனுமதி.
மார்ச் 11: மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக கீவ், கார்கிவ், மரியுபோல், செர்னிஹிவ், சுமி நகரில் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவிப்பு.
மார்ச் 15: செக் குடியரசு, போலந்து, ஸ்லோவேனியா பிரதமர்கள் கீவ் நகருக்கு சென்று, அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து திரும்பினர்.* உக்ரைனில் தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு.
மார்ச் 20: போரால் உக்ரைனில் 1 கோடி பேர் (நாடு கடந்தவர்கள் உட்பட) இடம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா., தகவல்.
மார்ச் 21: மரியுபோல் நகரை சுற்றி வளைத்த ரஷ்ய படை, அந்நகரிலுள்ள உக்ரைன் படை சரண் அடைய வேண்டும் என கோரியது. இதை ஏற்க உக்ரைன் மறுப்பு.
* மரியுபோல் நகரில் 400 பேர் தங்கியிருந்த பள்ளி மீது ரஷ்ய படை ஏவுகணை தாக்குதல்.
மார்ச் 24: உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள், 18 நாடுகளை சேர்ந்த 147 வெளிநாட்டினரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.