இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரையும் 2 விசைபடகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் 800க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. நெடுந்தீவு மற்றும் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 2 விசைப்படகில் இருந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து எல்லை தாண்டி வந்ததாக கூறி, மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியது. அவர்களை கிளிநொச்சி, மற்றும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீனவர்களை வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரையும், 2 விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்ற 26ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.
இதனால் இன்று 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் காரணமாக விசைப்படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இலங்கை வசமுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM