சமீப காலங்களில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்துவது சர்வ சாதாரண விசயமாகிப்போனது. உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தாலும் அவர்கள் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஏவுகணை சோதனை சற்று வித்தியாசமானது. இந்த சோதனையை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முன்னின்று நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லெதர் ஜாக்கெட், சன்கிளாஸ் என்று முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளித்திருக்கிறார் கிம். அவர் வெளியில் வருவது முதல் ஏவுகணை சோதனை முடிவும் வரை மொத்த வீடியோவையும் சினிமா பாணியில் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். “Hwasong-17″ என்பது கண்டம் விட்டு கண்டம் சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கி அளிக்கும் திறன் கொண்ட பிரமாண்ட ஏவுகணையாகும். அதிகபட்சமாக 6,200 கிலோ மீட்டர் வரை அதிவேகமாகச் சென்று தாக்கும் தன்மை கொண்டது.
கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு வட கொரியா பரிசோதனை நடத்திய மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை இது எனச் சொல்லப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஏவுகணையின் பரிசோதனையானது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரியா, கடந்த சில ஆண்டுகளாக அதிக தொலைவில் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்யவில்லை. தற்போது மீண்டும் அந்த வேலையைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த ஏவுகணை சோதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. ஏவுகணை சோதனை குறித்து கிம் ஜாங் உன் “இந்த ஏவுகணை சோதனை, வடகொரியாவின் வலிமையை நிரூபிக்க நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை வடகொரியாவின் மற்ற தயாரிப்புகளை விட அதிக உயரம் மற்றும் தொலைவுகளைக் கடந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எந்த ராணுவ முயற்சிகளையும் கட்டுப்படுத்த தயாராக இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.