புதுடில்லி- ”ஆதாரை வாக்காளர் பட்டியலுடன் கட்டாயமாக இணைப்பது பற்றி யும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், ‘ஆன்லைன்’ வழியாக ஓட்டளிப்பது பற்றியும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,” என, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது சாதாரண விஷயமல்ல. இதை தடுப்பதற்கான பல்வேறு வழிகளை, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயருடன், அவரது ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்குவது பற்றி, மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் இணைக்கப்படுகிறது.
மேலும், ‘ஒரு நாடு; ஒரே வாக்காளர் பட்டியல்’ திட்டத்தை அமல்படுத்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இதனால், ஒரு வாக்காளரின் பெயர், இரண்டு இடங்களில் இடம் பெற முடியாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்,’ஆன்லைன்’ வழியாக ஓட்டளிப்பது பற்றி, தேர்தல் கமிஷனிடம் மத்திய அரசு பேசியுள்ளது.தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, அரசு விரும்புகிறது.
அதேநேரத்தில், கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என சட்டம் கொண்டு வரும் எண்ணம் அரசிடம் இல்லை. நம் தேர்தல் மற்றும் ஓட்டளிப்பு முறையை, உலக நாடுகள் பலவும் பாராட்டிஉள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement