30 நாள்களாக ரஷ்யாவைத் தாக்குப் பிடிக்கும் உக்ரைன்! – என்னென்ன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 30-வது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமான தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது ரஷ்யா. வலிமையான ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து, விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டுவருகிறது உக்ரைன். `மிகக் குறைந்த அளவிலேயே படை பலமும், ஆயுத பலமும் கொண்ட உக்ரைனை, வலிமை பெற்ற ரஷ்யப் படைகளால் இத்தனை நாள்களுக்கு பின்பும் கட்டுக்குள் கொண்டு வர முடியாதது ஏன்?’ என்ற விவாதங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.

உக்ரைன் – ரஷ்யா போர்

அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்கியிருக்கின்றன. ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் தாக்குப் பிடிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய நவீன போர் ஆயுதங்கள்தான் காரணம் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். ரஷ்யப் படைகளைச் சமாளிக்க உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்!

ஜாவ்லின் ஏவுகணைகள்!

சக்திவாய்ந்த பீரங்கிகளை எதிர்த்துப் போரிட உதவுகின்றன ஜாவ்லின் ஏவுகணைகள். ரஷ்யாவின் பெரும்பாலான பீரங்கிகளை அழித்தது ஜாவ்லின் ஏவுகணைகள்தான் என்கின்றன சர்வதேச ஊடகங்கள். 2,000-த்துக்கும் அதிகமான ஜாவ்லின் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜாவ்லின் ஏவுகணைகளின் தாக்குதலில் பெரும்பாலான ரஷ்ய பீரங்கிகள் அழிந்துவிட்டதால், சில இடங்களிலிருந்து ரஷ்யா தனது பீரங்கிப் படைகளைப் பின்வாங்கியிருப்பதாகவும் செய்திகள் கூறப்படுகின்றன.

போர்

kamikaze டிரோன்!

ஏவுகணைகள் இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது பாதி வழியிலேயே மறித்துத் தாக்கக்கூடிய ஆற்றல் பெற்றவைதான் இந்த கமிகேஸ் டிரோன்கள். இதில் ஸ்விட்ச்ப்ளேட் 300, ஸ்விட்ச்ப்ளேட் 600 என்று இரண்டு வகை டிரோன்கள் இருக்கின்றன. இரண்டுமே 1.3 மீட்டர் நீளம் கொண்டவை. இதில் ஸ்விட்ச்ப்ளேட் 600 வகை டிரோன்கள் அதிக தூரம் பயணிக்ககூடிடயவை. நிலம், நீர், ஆகாயம் என மூன்றிலிருந்தும் இந்த வகை டிரோன்களை ஏவ முடியும்.

ஸ்டிரிங்கர்!

வீரர்கள் கையில் எடுத்துச் செல்லும்படியான வான் பாதுகாப்பு கருவிதான் ஸ்டிரிங்கர். ராணுவத்தினர் தோள்பட்டை மீது வைத்து எதிரிகளின் இலக்கை எளிதாகத் தாக்குவதற்கு இந்த ஸ்டிரிங்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா, 600-க்கும் அதிகமான ஸ்டிரிங்கர்களை உக்ரைனுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஜெர்மனியும் நூற்றுக்கணக்கான ஸ்டிரிங்கர்களை உக்ரைனுக்குக் கொடுத்திருக்கிறது. வான்வெளியில், குறைந்த உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அழிக்க உதவுகிறது இந்த ஸ்டிரிங்கர்.

NLAW ஏவுகணைகள்!

NLAW ஏவுகணைகளும் தோள்பட்டைமீது வைத்துத் தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதம்தான். பீரங்கிகள், கூட்டமாக வரும் படை வீரர்களை அழிக்க இந்த வகை ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது உக்ரைன் ராணுவம். இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் ஆயிரக்கணக்கில் NLAW ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியிருக்கின்றன.

போர் ஆயுதங்கள்

எஸ்-300 ஏவுகணை!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எஸ்-300 ரக ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த அதிநவீன ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் போர் விமானங்கள்மீது தாக்குதல் நடத்திவருகின்றன உக்ரைன் படைகள்.

TB2 டிரோன்!

உக்ரைனுக்கு சுமார் 20 டிபி2 டிரோன்களை துருக்கி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் வான் பகுதி பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த டிபி2 டிரோன்கள்தான் பெரிதும் உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.