ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா ராணுவத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. மிகக் குறைந்த அளவிலேயே படை பலமும், ஆயுத பலமும் கொண்ட உக்ரைனை, ரஷ்யா விடாமல் தாக்கி வருகிறது. உக்ரைனும் ஈடுகொடுத்து தாக்கி வருகிறது. இந்தப் போரின் காரணமாக உலகளவில் தற்சமயம் அனைவரும் ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடுகளை உற்று கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், `ஹெர்மிட்டேஜ் கேபிடல் மேனேஜ்மெண்ட்’ என்ற நிறுவனம் புதினின் சொத்து மதிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், புதினுக்கு 200 பில்லியின் அமெரிக்க டாலர்கள் அளவுக்குச் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும். மேலும் 700 கார்கள், பல ஜெட் விமானங்கள், 58 விமானங்கள், ரூ.5.35 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், இத்தாலியில் 6 மாடி கொண்ட அதிநவீன சொகுசுப் படகும் புதினுக்கு சொந்தமாக இருப்பதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
அதேபோல, கருங்கடலுக்கு மிக அருகே 1,90,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன சொகுசு பங்களாவும், நவீன சொகுசு விமானமும் அவற்றில் கழிப்பறைகளில் தங்கமுலாம் பூசப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.