மேற்கு வங்க மாநிலத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் எனும் இடத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. வன்முறையில் ஒரு கும்பல் குடிசை வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தியது. இதில் குடிசை வீடிகளில் வசித்து வந்த குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள் எனவும், சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை, மேற்கு வங்க மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது.
இதற்கிடையே, பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சாட்சிகள் பாதுகாக்கப்படுவதையும், அப்பகுதியில் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறும், முழு நேர கண்காணிப்பிற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறும் மேற்கு வங்க மாநில அரசுக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று, இந்த வழக்கை மீண்டும் விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையை வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.