டிம் டேவிட் – மும்பை
கேமியோக்களின் ரோமியோவான டிம் டேவிட்டை, தனது கூடாரத்துக்குள் கொண்டு வந்து அதிரடி ஃபினிஷர் அவதாரமெடுக்க வைக்க மும்பை முயன்றுள்ளது. வேகப்பந்து வீச்சினை நன்முறையில் கவனிக்கும் பவர் ஹிட்டரான டிம் டேவிட், ஸ்பின் பந்துகளைச் சமாளிப்பதிலும் சமர்த்தர்தான் என்பதால் மிடில் ஓவராக இருந்தாலும், இறுதித் தருணங்களாக இருந்தாலும் சிக்ஸர்கள் சிதறலாம். போதாக்குறைக்கு இவரது ஆஃப் பிரேக் பௌலிங்கும், ஆறாவது பௌலிங் ஆப்சனாக இவருக்குக் கூடுதல் மதிப்பூட்டியதால் சற்றும் தயக்கமின்றி ஜோஃப்ரா ஆர்ச்சருக்குச் செலவழித்ததைவிட 25 லட்சம் அதிகம் கொடுத்தே மும்பை இவரை வாங்கியுள்ளது. பல டி20 லீக்குகளைப் பார்த்தவர் என்பதும், பொல்லார்டின் பிரதியாக இவர் இருப்பார் என்பதும் மும்பை இவர்மேல் நம்பிக்கையை வைக்கக் காரணமாக உள்ளது. இருப்பினும் இந்தியத் துணைக்கண்டச் சூழலில் இவர் எப்படி ஆடப் போகிறார் என்பதுதான் கூடுதல் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
உம்ரான் மாலிக் – சன்ரைசர்ஸ்
போர்க்கள பூமியிலிருந்து புறப்பட்டு வந்த அதிவேக ஏவுகணை, மணிக்கு 150+ கிமீ வேகத்தில் பந்தினால் பயங்காட்டும் பீரங்கி. கடந்த ஐபிஎல்லில் மூன்றே போட்டிகளில் அவர் எடுத்த இரண்டே விக்கெட்டுகள் நான்கு கோடிக்கு சன்ரைசர்ஸை அவரைத் தன்வசம் வைத்துக் கொள்ள வைத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே குறைவான போட்டிகளில் ஆடியும் அதிகத் தொகைக்கு தக்க வைத்துக் கொள்ளப்பட்ட முதல் வீரர் உம்ரான்தான். நெட் பௌலராக அணியில் இணைந்தவருக்கு நடராஜனின் காயம், வாய்ப்புக் கதவைத் திறக்க, கேகேஆருக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே மணிக்கு 153 கிமீ வேகத்தில் பந்தினை வீசி, தலைப்புச் செய்திகளை அலங்கரித்தார் உம்ரான். வக்கார் யூனிஸ், அக்தர் என ஏற்கெனவே அத்தனை சாதனையாளர்களுடனும் ஒப்பிடப்பட்டு விட்டார். ஒரு முழு சீசனும் விளையாட இம்முறை உம்ரானுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. அது சிறப்பாகச் செல்லும்பட்சத்தில் சன்ரைசர்ஸுக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கேகூட அனுகூலமாக அமையும்.
சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டிஎன்பிஎல் ஏணியில் ஏறித் தொடங்கிய சாய் கிஷோரின் கிரிக்கெட் உலா, இந்திய அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தில் காத்திருப்போர் பட்டியல் வரை நீண்டுவிட்டது. தமிழ்நாடு அணியின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர வீரராக பதவி உயர்வு பெற்றும் காலங்கள் ஓடிவிட்டன. பொதுவாக மிடில் ஓவர்களில் மட்டுமே தீரம் காட்டும் சுழல்பந்து வீச்சாளர் என்பதையும் தாண்டி, பவர்பிளே, டெத் ஓவர்கள் என அனைத்திலும் கைவரிசை காட்டும் அனைத்து ஃபார்மெட்டுக்கான வீரராகவும் அடையாளம் பெற்றுவிட்டார் சாய் கிஷோர். இவரால் போட்டிகளை அல்ல, கோப்பைகளையே வென்றுள்ளது தமிழக அணி. டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பௌலரும் இவர்தான். ஆனாலும், ஐபிஎல் மேடையில் இன்னமும் இவரால் அரங்கேற்றம் செய்ய முடியவில்லை. சிஎஸ்கேயின் பெஞ்சிலேயே கழிந்த இவரது காலம், தற்போது குஜராத் டைட்டன்ஸால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல்லில் உற்று நோக்கப்படும் தமிழக முகங்களில் சாய் கிஷோருடையதும் ஒன்று.
துஷ்மந்த ஷமீரா – லக்னோ
தனது முதல் ஐபிஎல் என்பது கூட நினைவுக்கு வர விடாதபடி, கம்பீரின் வழிகாட்டுதலில் அணியை வலிமையாகக் கட்டமைக்க முனைந்திருந்தது லக்னோ அணி. இரண்டு கோடிக்கு எடுக்கப்பட்ட ஷமீரா, லக்னோ முதலீடு செய்துள்ள ஒவ்வொரு காசுக்கும் அர்த்தமேற்படுத்தக் கூடியவர். முன்னதாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஒரு ஐபிஎல் போட்டியில்கூட இவர் ஆடியதில்லை. அந்த வகையில் இவருக்கு இது அறிமுக ஐபிஎல் என்றாலும் துணைக்கண்ட சூழல்களில் அனுபவம் மிக்க வீரர் என்பதால் பந்துவீச்சில் மிரள வைப்பார். புதுப்பந்தில் மட்டுமின்றி டெத் ஓவர்களிலும் சரிசமமாக பயங்காட்டக் கூடியவர். வேகமும் உயரமும் இவரது ஆயுதங்கள் எனில் யார்க்கர்களோ மிரட்டும். பேட்டிங்கிலும் ஓரளவு நம்பத்தகுந்தவர் என்பதால், அது கூடுதல் தகுதியாகிறது. மார்க் உட் காயத்தால் விலகியுள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரர் இன்னமும் அறிவிக்கப்படாததால் அந்த இடத்தில் பிரதான ஓவர்சீஸ் பௌலராக ஷமீரா இடம்பெறலாம். அவிஷ் கான் – ஷமீரா இந்த இருவரது கூட்டணியும் எப்படி வியூகம் வகுத்து விக்கெட் காவு வாங்க இருக்கிறது என்பதுவும் சுவாரஸ்யமூட்டுவதாக இருக்கப் போகிறது.
சாமிக்க கருணரத்னே – கேகேஆர்
ஐபிஎல்லின் கடந்த சீசனின் போதே, ஹர்சா போக்லே, “இவரது பெயரை மாற்று வீரர்கள் பட்டியலில் பார்க்காதது, ஆச்சரியத்தை அளிக்கிறது” என்று கருத்துக் கூறியிருந்தார். இந்த முறை ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ள இன்னுமொரு இலங்கை வீரர் சாமிக்க கருணரத்னே. அட்டாக்கிங் பௌலிங் ஆல்ரவுண்டரான இவர், பவர்பிளே ஓவர்களிலும், மிடில் ஓவர்களிலும் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர் என்பதோடு சிறந்த ஃபினிஷரும்கூட. வேகத்தைக் கூட்டிக் குறைக்கக்கூடியவர். அதேபோல் ஃப்ளோட்டராக அணிக்கான டிரம்ப் கார்டாகவும் செயல்படக் கூடியவர். தொடக்கத்தில் பிளேயிங் லெவனில் இவர் இடம்பெற வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் அப்படி ஆடக்கூடிய பட்சத்தில் போட்டியின் போக்கையே பேட்டினாலோ அல்லது பந்தினாலோ மாற்றி அமைக்கக் கூடியவர்.
ரோவ்மன் பவல் – டெல்லி
ஐபிஎல்லையே ஆட்டிவைக்கும் கரீபியன் ஆல்ரவுண்டர்களின் வரிசையில் புதிய இணைப்புதான் டெல்லியின் வசம் வந்திருக்கும் ரோவ்மன் பவல். 2021 ஏலத்தில் வாங்கப்படாத வீரராக ஓரங்கட்டப்பட்டவர், இம்முறை ரூ.2.8 கோடிக்கு முக்கிய அணியான டெல்லியாலேயே வாங்கப்பட்டிருக்கிறார். “தனது பேட்டிங்கால், தோட்டாக்களைச் சிதற விடக்கூடியவர்” என சமீபத்திய இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையேயான தொடரின் போது, ரிஷப் பண்ட் கருத்துக் கூறியிருந்தார். அந்தத் தொடரிலேயே தனது திறனுக்கான டிரெய்லரை ரோவ்மன் காட்டியிருந்தார். படம் விரைவில் ஐபிஎல் திரையரங்கத்தில் வெளியாக உள்ளது. வெளியாகியிருக்கும் அவரது பயிற்சி வீடியோக்களும் அதைத்தான் உறுதி செய்கின்றன. வேகப்பந்து வீச்சை சரமாரியாக அடித்து துவம்சம் செய்யும் ரோவ்மன், ஏற்கெனவே கோப்பை வெல்வதற்கான சகல அம்சமும் பொருந்தியுள்ள டெல்லி கேப்பிடல்ஸை பூரணத்துவம் பெற வைக்கிறார்.
ஓடியன் ஸ்மித் – பஞ்சாப்
ஐபிஎல் ஏலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, அதிகத் தொகைக்கு எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர், ஓடியன் ஸ்மித். வேகத்தால் எதிரணியை அடித்துக் தூக்கும் கரீபியன் காட்டாறு. கரீபியன் மற்றும் இலங்கை பிரீமியம் லீக்குகளில் ஆடியவர்தான் என்றாலும், 2021 கரீபியன் லீக்கில் இவர்தான் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்றாலும் போன முறையே வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இம்முறை ஆறு கோடிக்கு அவரை வாங்கி அந்த வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ். மிடில் ஓவர்களில் பந்துவீச்சில் ரபாடாவுக்கு கை கொடுக்கக் கூடியவர் என்பதோடு லோயர் ஆர்டரில் பொருந்திப் போவார். ஃபினிஷராகவும் தேவைப்பட்டால் ரன்களைத் துரிதகதியில் சேர்ப்பார் என்பதெல்லாம் சேர்ந்து இவரை அணியின் முக்கிய சொத்தாக்கியுள்ளது.
அனுஜ் ராவத் – ஆர்சிபி
கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸின் வசம் 80 லகரத்தில் இருந்தார் அனுஜ் ராவத். இந்தாண்டு ஏலத்தின் தொடக்கத்தில் இருந்து சன்ரைசர்ஸ் மற்றும் குஜராத்துடன் மல்லுக்கட்டி ரூ.3.40 கோடி கொடுத்து ஆர்சிபி தங்கள் பக்கம் கொண்டு வந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதிரடி ஓப்பனர், அதுவும் இடக்கை வலக்கை சட்டத்திற்குள் பொருந்திப் போகக் கூடியவர், ஸ்பின் பந்துகளில் நேர்த்தியாக ரன்களைக் களவாடக் கூடியவர் என்பதுடன், விக்கெட் கீப்பர் என்ற கூடுதல் அந்தஸ்தும் சேர்ந்துதான் இவரின் மீது ஆர்சிபியைக் கண்வைக்க வைத்தது. ஆர்சிபியின் மாதிரி ஏலத்திலேயே இவரை எப்படி எடுப்பது என அவர்கள் திட்டமிட்டிருந்தது பின்னாளில் வந்த ஆர்சிபி வீடியோவில் காட்டப்பட்டிருந்தது. ஐபிஎல் அனுபவம் அவ்வளவாக இல்லையெனினும் உள்ளூர்ப் போட்டிகளில் வெளிப்பட்ட இவரது ஆட்டத்திறன், ஆர்சிபிக்காக ஆடும் போது எப்படி அமைய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெவால்ட் பிரெவிஸ் – மும்பை
எல்லா ஐபிஎல்லிலும் அத்தனை ரசிகர்களையும் அணிவேறுபாடின்றி, தேசப் பாகுபாடின்றி ஏதோ ஒரு வீரர் நேசிக்க வைப்பார். கெய்ல், வார்னர், டி வில்லியர்ஸ், சாம் கரண், ஃபாஃப் என அப்பட்டியல் நீளும். அதில் இந்த சீசனில் இணைந்துள்ளவர்தான் ‘பேபி ஏபி’ எனக் கொண்டாடப்படும் டெவால்ட் பிரெவிஸ். சமீபத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 மூலம், உலகத்தின் பார்வையில் படிந்தவர். ஏபிடி வில்லியர்ஸின் நகல் போல பேட்டிங் ஸ்டான்ஸிலிருந்து ஆடும் ஷாட்கள் வரை, அனைத்திலும் அவரை நினைவூட்டுகிறார். அதேபோல் ஏபிடி வில்லியர்ஸ் விலகியபின் நடக்கும் முதல் ஐபிஎல்லில் இவர் உள்ளே வந்திருக்கிறார். இப்படிப் பல காரணங்களால் இவர் மேல் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. அண்டர் 19-ன் சென்ஷேனனான இவர், இந்த வருட ஐபிஎல்லின் கவன ஈர்ப்புவிசையாக மாறியுள்ளார். உலகக்கோப்பையில் செய்த அதே மேஜிக்கினை இங்கேயும் அவர் நிகழ்த்திக் காட்ட வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆசை. மும்பைக்கு இன்னமும் பல சீசனுக்கான முதலீடாக இவர் இருக்கப் போகிறார்.
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் – சிஎஸ்கே
அண்டர் 19 கோப்பையை இளம் இந்திய அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். பொதுவாக அனுபவம் மிக்க வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சிஎஸ்கேயில் புதிதாக இணைந்துள்ள இந்திய சுட்டிக் குழந்தை. உலகக்கோப்பையில் ஆறு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இவர், 3.67 என்னும் கட்டுக்கோப்பான எக்கானமியோடும் பந்துகளை வீசியிருந்தார். மணிக்கு 140-க்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசக் கூடியவர் ஹங்கர்கேகர். அண்டர் 19 ஆசியக் கோப்பையிலும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 190 ஸ்ட்ரைக் ரேட்டோடு அதிரடி காட்டி இருந்தார். பவர் பிளேயிலும், மிடில் ஓவர்களிலும் கைவரிசை காட்டக் கூடியவர் என்பதோடு ஓரளவு பேட்டையும் பேச வைப்பவர். முன்னதாகவே அணியில் இவர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன எனச் சொல்லப்பட்ட நிலையில், தீபக் சஹாரின் காயமும் இவரது வாய்ப்பை ஏறக்குறைய உறுதிப்படுத்தியுள்ளது. “இவர்தான் தீபக் சஹாருக்கான சரியான மாற்றுவீரர்” என இர்ஃபான் பதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ரசிகர்களின் ரேடார் கண்கள் தேடும் ஸ்டார் முகங்களின் பவனிதான் ஐபிஎல் என்றாலும், அதிகப் பரிச்சயமற்ற, ஆனால் எழுச்சி பெறுமென எதிர்பார்க்கப்படக் கூடிய புதிய முகங்களான இவர்களும் ஆட்டத்தின் போக்கையும், பாயின்ட்ஸ் டேபிளில் அணிகளின் இடத்தையும் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். இதில் உங்களின் ஃபேவரைட் யார்? இவர்களைத் தவிர வேறு எந்த இளம் வீரர் சாதிப்பார்? கமென்ட்டில் சொல்லுங்கள்.
நாளை இதேபோல சீனியர் பிளேயர்களில் எந்தப் பத்து வீரர்கள் சாதிப்பார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.