காஷ்மீர் பைல்ஸ்
படத்துக்கு வரி விலக்குக் கொடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான தேவை என்ன இப்போது வந்திருக்கு. அந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்றால் பேசாமல் யூடியூபில் போட்டு விடுங்களேன்.. என்று
டெல்லி
முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால்
கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபையில் அவர் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார். அவரது கடுமையான விமர்சனத்துக்கு
பாஜக
தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் எழுந்துள்ளது. காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பாக பாஜகவினர் நாடகமாடுவதாகவும், ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரி ஹிட்லருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டும் பேசியுள்ளார் கெஜ்ரிவால்.
டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
வேலைகளைக் கொடுத்தார் பிரதமர் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். சர்வாதிகாரி ஹிட்லர் கூடத்தான் தனது வேலையாட்களுக்கு வேலை கொடுத்தார். மோடி என்ன கொடுத்தார்? . கெஜ்ரிவால்தான் உங்களுக்கெல்லாம் வேலை கொடுக்கிறார். உங்களுக்குத் தேவையான மருந்துகளை கெஜ்ரிவால்தான் தருகிறார். மோடி அல்ல. உங்களது கண்களை திறந்து கொள்ளுங்கள். பாஜகவை விட்டு வெளியே வாருங்கள். ஆம் ஆத்மியில் இணையுங்கள்.
காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி விலக்கு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். உங்களுக்கு இந்தப் படத்தை எல்லோரும் இலவசமாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், விவேக் அக்னிஹோத்திரியிடம் கூறி, அப்படத்தை யூடியூபில் போடச் சொல்லுங்களேன்.. ஒரே நாளில் எல்லோரும் இலவசமாக படத்தைப் பார்த்து விடுவார்கள். உங்களுக்கு வேலை சுலபமாகும் இல்லையா.
பிரதமர் மோடி இந்த நாட்டை ஆள ஆரம்பித்து 8 வருடமாகி விட்டது. அப்படி இருந்தும் , ஒரு படத்தை வைத்து தனக்கான அரசியல் லாபத்தை அடையும் நிலையில் அவர் இருக்கிறார் என்பது துரதிர்ஷ்டவசமானது என்று சாடியுள்ளார் கெஜ்ரிவால்.
தி காஷ்மீர் பைல்ஸ் படம் காஷ்மீரில் இந்து பண்டிட் சமூகத்தினர் சந்தித்த அவலங்களை விவரிப்பதாக உள்ளது. இந்தப் படத்தை பாஜகவினர் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தை பாஜகவினர் ஆங்காங்கு தியேட்டர்களில் மக்களுக்கு இலவசமாக திரையிட்டும் வருகின்றனர். பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு வரி விலக்கு தரப்பட்டுள்ளது.
பாஜக கண்டனம்
இதற்கிடையே, கெஜ்ரிவால் பேச்சுக்கு டெல்லி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கூறுகையில், காஷ்மீர் பண்டிட்டுகளின் வலி குறித்த அடிப்படை உணர்வு கூட கெஜ்ரிவாலுக்கு இல்லை. அறிவிலியாக பேசியுள்ளார். மனிதாபிமானம் உள்ள யாருமே இப்படிப் பேச மாட்டார்கள். குரூர மனம் படைத்தவர்களால்தான் இவ்வாறு பேச முடியும் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.