“அரசுக்கு களங்கம் விளைவிக்க பாஜக முயற்சி” – திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21 ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. .
இதனிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் உயிரிழந்த நபர்களின் பேரின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலையும், 5 லட்ச ரூபாய் இழப்பீடும், வன்முறையில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பீர்பூம் வன்முறை சம்பவம் மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்கும் இடையே மீண்டும் சண்டையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் அவரை பதவி நீக்கம் செய்து மத்திய விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், “பாஜகவினர் இறந்த உடல்கள் மீது குறுகிய எண்ணம் கொண்ட அரசியலில் ஈடுபடுகிறார்கள்” என விமர்சித்துள்ளனர். அதே சமயம் பாஜக தரப்பு, குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இந்த வன்முறையில் கொல்லப்பட்ட 8 பேரின் குடும்பங்களுக்கு நீதி வழங்க மாநில அரசு தன்னால் இயன்றதைச் செய்தாலும், மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன” என்று கூறியுள்ளார். மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பாஜக தங்கள் அரசியல் செய்வதற்காக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாடியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.