கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள வரலாற்றுத் தொன்மையான பொன்னேரியில், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்த 170 ஏக்கர் நிலத்தை அதிரடியாக மாவட்ட நிர்வாகம் மீட்டு எடுத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின் துணிச்சலான நடவடிக்கை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்னேரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் மனிதர்களை வைத்து வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியானது தெற்கு – வடக்கில் சுமார் 4 கிலோமீட்டர், கிழக்கு-மேற்கில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அரசு பதிவேட்டின்படி 824 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 18 அடி ஆழம் கொண்டதாகும். சுமார் 250 ஆண்டுக்காலம் சோழப் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரம் அருகில், சோழகங்கம் என்னும் பொன்னேரியை வெட்டி மாமன்னன் ராஜேந்திர சோழன் புகழ் சேர்த்தான் என்றால் மிகையாகாது.
அப்படிப்பட்ட வரலாற்றுத் தொன்மையான இந்த ஏரியையும் நூறாண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர் சிலர். அத்தோடு சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் ஆகிய மரங்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில்தான், நீதிமன்றம் ஏரிகுளங்களை ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கடுமையான உத்தரவைப் பிறப்பிருந்தது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஏரி, குளம், குட்டை, ஊரணி, வாய்க்கால் ஆகிய நீர்நிலைப் பகுதிகளில் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் அவர்களிடமிருந்து மீட்பு நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவின்படி பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் உதவிப் பொறியாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன் அதிரடி நடவடிக்கையில் 824 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னேரியில் சுமார் 170 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுள்ளது.
இந்த மீட்புப் பணியானது மூன்று நாள்களாக நடந்து வருகின்றன. இதில் ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், வருவாய் ஆய்வாளர் செல்ல கணேஷ், நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் இந்த துணிச்சலான நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.