புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்றுபாதிப்பு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு
மத்திய சுகாதார துறை இணையமைச்சர் பாரதி பர்வீண் பவார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல்களை மாநில அரசுகளிடம் கோரியிருந்தோம். இதுவரை சில மாநிலங்கள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அந்த மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.மாநிலங்களின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
180 வழிகாட்டு நெறிகள்
கரோனா தடுப்பு தொடர்பாக இதுவரை 180 வழிகாட்டு நெறிகள்மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உதவியால் மாநிலங்களில் ஆக்சிஜன் இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் போதுமான ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழு வதும் புதிதாக 3,756 ஆக்சிஜன் ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 4,02,517 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1,13,858 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித் துள்ளார்.
– பிடிஐ