புதுடில்லி: இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் ஏற்றுமதியானது 6 மடங்கு அதிகரித்துள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கடந்த 2014- 15 நிதியாண்டில், ரூ.1,941 கோடி அளவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22 நிதியாண்டில் ரூ.11, 607 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஏற்றுமதியை அதிகரிக்கவும், எளிதாக தொழில் செய்யவும் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. .
ஏற்றுமதிக்கான நடைமுறைகள் எளிமைபடுத்தப்பட்டதுடன், ஏற்றுமதியை அதிகரிக்கவும், சர்வதேச டெண்டரில் கலந்து கொள்ளும் வகையிலும் டிஆர்டிஓ மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. துப்பாக்கி தொழிற்சாலை வாரியம் கார்பரேட் மயமாக்கப்பட்டதுடன் அதன் கீழ் உள்ள 41 தொழிற்சாலைகள் 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
2025ம் ஆண்டிற்குள் ரூ.36,500 கோடி அளவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு ஜன., மாதம் 2,770 கோடி ரூபாய் மதிப்பு பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் பிலிப்பைன்சுடன் கையெழுத்தானது. பிரமோஸ் ஏவுகணை மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தொடர்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சுடன் இந்தியா ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement