கராச்சி,
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியை சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“பாகிஸ்தான் அணி நிர்வாகம் வெற்றிபெறும் மனநிலையில் இல்லை. அவர்கள் மிகவும் தற்காப்பு மனப்பான்மையுடன் விளையாடினர், மோசமான பிட்ச்களை உருவாக்கினர், தொடரை சமன் செய்ய முயன்றனர். இதனால் அவர்களே குழிக்குள் விழுந்தனர். ஆஸ்திரேலியாவுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானுக்காக நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்”. இவ்வாறு அவர் கூறினார்.