புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மின் விபத்துகளால் 17,781 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்
மின்கசிவு காரணங்களால் கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த பதிலை அளித்துள்ளார்.
அமைச்சரின் பதிலில், “இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளில் மின் உற்பத்தி நிலையங்கள், மின்பகிர்மானப் பிரிவுகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் ஏற்பட்ட மின்விபத்துகள் பற்றிய தரவுகளை மத்திய அரசு திரட்டியுள்ளது. அதன்படி நாட்டில் ஆறு மண்டலங்களாக உள்ள மின்பகிர்மான நிர்வாகத்தில் 2018-19ம் ஆண்டில் 6,646 பேரும், 2019-20 ம் ஆண்டில் 5515 பேரும், 2020-21ம் ஆண்டில் 5,620 பேரும், ஆக மொத்தம் கடந்த மூன்றாண்டுகளில் 17,781 பேர் மின்சார விபத்துகளால் உயிரிழந்துள்ளார்கள். இதுதவிர பல்லாயிரக்கணக்கான விலங்கினங்களும் உயிரிழந்துள்ளன. பொருட் சேதம் பற்றிய கணக்கீடு மத்திய அரசிடம் இல்லை.
மின்கசிவு, ஷார்ட் சர்கியூட் உள்ளிட்ட பிரச்னைகளால் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின் விபத்து ஏற்படாமல் தடுக்க தற்போதுள்ள மின்சார சட்டங்களின்படி மின்சாதனங்களை தயாரிப்பது கண்காணிக்கப்படுகிறது. மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் பிரத்யேகக் கருவிகளும் இந்திய சட்டங்களின்படியும் சர்வதேசத் தரத்தின்படியும் தயாரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய மின்சார ஆணைய விதிமுறைகளின்படி மின்சாரக் கசிவு அல்லது எர்த் குறைபாடு ஏற்பட்டால் மின்விநியோகம் தானாகவே துண்டிக்கப்படும் வகையிலான மின் சாதனங்களை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைப்பதும் உறுதிசெய்யப்படுகிறது.
இதை முறையாக அமல்படுத்துவதன் மூலம் மின்சார விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதை பெருமளவு தடுக்க முடியும். அதற்கேற்ப மாநில மின்சார வாரியங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.