சென்னை: இந்திய மருத்துவ முறைகளின்படி புற்று நோய்க்கான மருந்தைக் கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நாடாளு மன்றத்தில், திமுக எம்பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழிஎன்விஎன்.சோமு, ‘‘அகில இந்தியஆயுர்வேத நிறுவனம், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய ஆயுஷ் துறைஅமைச்சர் சர்பானந்த சோனோவால் பதில் அளித்ததாவது: தேசிய புற்று நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த புற்று நோயியல்மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ முறைகளின்படி அமைந்த மருந்துகளின் அடிப்படையில் புற்று நோய் தொடர்பானஆராய்ச்சி மற்றும் திட்டங்களை செயல்படுத்துவது இந்த மையத்தின் நோக்கமாக வடிவமைக்கப்பட் டுள்ளது.
இவ்வறு அவர் தெரிவித்தார்.