மும்பை: ஐ.பி.எல்., தொடரின் துவக்க போட்டியில் இன்று (மார்ச் 26) சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டன் ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ், ராயுடு அடங்கிய ‘ஆர்’ கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 15வது ஐ.பி.எல்., தொடர்(மார்ச் 26-மே 29) நடக்க உள்ளது. சென்னை, மும்பை, கோல்கட்டா, குஜராத், லக்னோ உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, கோல்கட்டாவை சந்திக்கிறது. கடந்த முறை பைனலில் இவ்விரு அணிகளே மோதின.
அப்போது டுபிளசி(86 ரன்), மொயீன் அலி(37), ஷர்துல் தாகூர்(3 விக்.,) கைகொடுக்க, சென்னை கோப்பை வென்றது. இம்முறை நிலைமை தலைகீழாக உள்ளது. சமீபத்திய ‘மெகா’ வீரர்கள் ஏலத்திற்கு பின் அனைத்து அணிகளும் மாற்றம் கண்டுள்ளன. பெங்களூரு அணி கேப்டனாகிவிட்டார் டுபிளசி. டில்லிக்கு சென்று விட்டார் ஷர்துல். சென்னை அணியை 12 ஆண்டுகளாக வழிநடத்திய ‘தல’ தோனி சாதாரண வீரராக களமிறங்குகிறார்.
புதிய கேப்டனாக ‘ஆல்-ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா அசத்த காத்திருக்கிறார். இவருக்கு துவக்க வீரர் ருதுராஜ், ராயுடு கைகொடுக்கலாம். இந்த மூவரின் பெயரும் ஆங்கில எழுத்தான ‘ஆர்’ல் துவங்குவது சிறப்பு. ‘விசா’ பிரச்னையில் சிக்கிய மொயீன் அலி இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார்.
நியூசிலாந்தின் அதிரடி துவக்க வீரர் டேவன் கான்வே, உத்தப்பா, பிராவோ, தோனி என பேட்டிங் படை நீள்கிறது. ‘கூல்’ தோனியின் வியூகம் அணிக்கு யானை பலம். பந்துவீச்சில் தீபக் சகார் இல்லாதது பலவீனம். இவருக்கு பதில் ஜோர்டான் வாய்ப்பு பெறலாம். ஆடம் மில்னே, சான்ட்னர் சாதிக்கலாம்.
மகராஷ்டிராவின் இளம் ‘ஆல்-ரவுண்டர்’ ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை, ரூ. 1.5 கோடி கொடுத்து சென்னை வாங்கியது. மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசும் இவர், அதிரடியாக பேட் செய்யும் திறன் பெற்றவர். இவரும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.
பந்துவீச்சு பலம்:
கடந்த முறை கோல்கட்டா கேப்டனாக மார்கன் இருந்தார். இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. இங்கிலாந்தின் ஹேல்ஸ் விலகிய நிலையில், துவக்க வீரராக வெங்கடேஷ் ஐயர் உடன் ரகானே வரலாம். நரைனும் துவக்கத்தில் வர வாய்ப்பு உண்டு. பேட்டிங்கில் மிரட்ட நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் உள்ளனர். பவுலிங் தான் அசுர பலத்தில் உள்ளது.
‘சுழல்’ ஜாலம் காட்ட சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி உள்ளனர். வேகத்தில் கலக்க சவுத்தீ, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி உள்ளனர். ‘ஆல்-ரவுண்டர்’ ஆன்ட்ரே ரசல் இருப்பது கூடுதல் பிளஸ். பின்ச், பாட் கம்மின்ஸ் துவக்க போட்டிகளில் பங்கேற்க இயலாதது பலவீனம்.
துவக்க விழாவுக்கு ‘நோ’
ஐ.பி.எல்., துவக்க விழா முன்பு எல்லாம் பிரமாண்டமாக நடக்கும். 2019ல் துவக்க விழா ரத்து செய்யப்பட்டு, அதற்கான நிதி புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 2020, 21ல் கொரோனா காரணமாக விழா நடக்கவில்லை. இம்முறையும் துவக்க விழா கிடையாது. ரூ. 30 கோடி செலவு செய்ய வேண்டியிருப்பதால், துவக்க விழாவை பி.சி.சி.ஐ., ரத்து செய்துள்ளது.