சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் தாஸ் என்பவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஆக்ஸிஜன் பற்றக்குறையால் சிறுமி உயிரிழந்து விட்டதாக அங்கு பணியாற்றிய டாக்டர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டீற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இறந்த தமது மகளின் உடலை தோளில் சுமந்தவாறு ஈஸ்வர் தாஸ் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ வைரலானது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ கூறுகையில், ‘நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியிடம் கூறியுள்ளேன். சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணியை செய்ய முடியாதவர்களை பணி நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.