உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சில நாட்களுக்கு முன் ரஷ்யாவில் தொடர்ந்து இயங்கி வரும் சுவிஸ் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான விமர்சனம் முன்வைத்தார்.
உக்ரைனில் தங்கள் பிள்ளைகள் கொல்லப்படும் நிலையிலும், இந்த சுவிஸ் நிறுவனங்கள் தொடர்ந்து ரஷ்யாவில் இயங்கிவருவதாக தெரிவித்தார் அவர். அவை ரஷ்யாவில் இயங்குவதை நிறுத்தவேண்டும் என்றும், அந்நாட்டு செல்வந்தர்களுடைய வங்கிக்கணக்குகளை சுவிஸ் வங்கிகள் முடக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் அவர்.
குறிப்பாக, நெஸ்ட்லே நிறுவனத்தை பெயர் குறிப்பிட்டே விமர்சித்திருந்தார் ஜெலன்ஸ்கி.
இந்நிலையில், நேற்று முன்தினம் நெஸ்ட்லே நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உக்ரைன் ஊடுருவல் காரணமாக, ரஷ்யாவில் செயல்படும் தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளை ரத்து செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல பிராண்ட்களான Nesquick, Kit Kat போன்ற தயாரிப்புகளை ரஷ்யாவில் தயாரிப்பதையும் விற்பனை செய்வதையும் நிறுத்தப்போவதாக நெஸ்ட்லே அறிவித்துள்ளது.
ஆனாலும், பால் பவுடர், மருந்துப் பொருட்கள் போன்ற சில அத்தியாவசிய பொருட்களின் தயாரிப்புகளை தொடர்ந்து தயாரிக்கவும் விற்பனை செய்யவும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னும் சிறிது காலத்திற்கு, இலாபத்தின் அடிப்படையில் இல்லாமல், ரஷ்யாவில் இயங்க இருப்பதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், அதனால் கிடைக்கும் வருவாயை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால், எதனால் ரஷ்யாவில் தனது நிறுவனப் பணிகளைக் குறைத்துக்கொள்ள இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து நெஸ்ட்லே நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.