மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவர் 24 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கைக்கான நோக்கமாக பெரிய இலக்குகளைப் பட்டியலிட்டார். உக்ரைனை நாஜிக்கள் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய ஆதரவாளர் அவரது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். உக்ரைன் ராணுவத்தினை முடக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் உக்ரைன் வலுவான எதிர் தாக்குதலைக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் மூத்த ஜெனரலான செர்கெய் ருட்ஸ்கோய், உக்ரைன் மீதான தாக்குதல் இலக்கை டான்பாஸ் எனப்படும் கிழக்கு பிராந்தியத்தைக் கைப்பற்றுவதோடு நிறுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தோல்வி முகத்தை மறைக்கலாம் என்று ரஷ்யா கணிப்பதாக ராணுவ நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தொடங்கி நிலம், வான்வழி, கடல்வழி என அனைத்து மார்க்கத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்திவருகிறது.
டான்பாஸ் பிராந்தியத்தில் கடந்த 8 ஆண்டுகளாகவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தங்களின் பிரதான இலக்கு டான்பாஸை கைப்பற்றுவதுதான் அது கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டதாக செர்கெய் ருட்ஸ்கோய் கூறியுள்ளார்.
ரஷ்ய தரப்பில் இதுவரை 1351 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செர்கெய் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் தரப்போ தாங்கள் 13,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், ரஷ்ய ராணுவ ஜெனரல்கள் 7 பேர் உயிரிழந்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்ய தாக்குதலை உக்ரைன் வெகு சிறப்பாக சமாளித்து வருவதாகவும், அதனாலேயே ரஷ்ய படைகள் விரக்தியில் மக்கள் வாழும் பகுதிகளை, குடியிருப்புகளை தகர்த்தி வருவதாகவும் போர் உத்திகளைப் பற்றி ஆராயும் லண்டனைச் சேர்ந்த RUSI என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
டான்பாஸ் பகுதியில் லுஹான்ஸ்க், டானட்ஸ்க் என இரு பகுதிகள் உள்ளன. இதில் லுஹான்ஸ்கில் 93% ரஷ்ய படைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. ஆனால் டானட்ஸ்கில் 54% மட்டுமே ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. முழுமையாக டான்பாஸையாவது கைப்பற்றி இதுதான் நாங்கள் கொண்டிருந்த இலக்கு என்று கூறி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று கணிக்கப்படுகிறது.
ரஷ்யாவை எப்படி சமாளிக்கிறது உக்ரைன்? – 5 காரணங்கள்: பலம் வாய்ந்த ரஷ்யாவை ஒரு மாதத்திற்கும் மேல் உக்ரைன் சமாளிப்பது குறித்த போர் நிபுணர்கள் விரிவாகப் பேசியுள்ளனர். அதில், முதல் காரணமாக உக்ரைனின் ஆயத்தநிலை கூறப்படுகிறது. 2014-ல் ரஷ்யா, உக்ரைனின் தீபகற்பமான கிரிமியாவை ஆக்கிரமித்தபோது உக்ரைன் ராணுவம் தனது படைபலத்தையும் திறமையையும் வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளது. 2016-ல், உக்ரைன் சிறப்புப் படைகளுக்கு நேட்டோ படைகள் பயிற்சி வழங்கியது. இந்த சிறப்புப் படையைச் சேர்ந்த 2000 பேர் இப்போதும் களத்தில் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாகவே உக்ரேனியர்கள் திட்டமிடுதல், பயிற்சி செய்தல், தங்களைத் தாங்களே ஆயுதத் தன்னிறைவுடன் வைத்துக் கொள்ளுதலை மேற்கொண்டுள்ளனர் என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர் டக்ளஸ் லண்டன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது காரணமாக, உக்ரைன் பற்றிய புரிதல் ரஷ்யாவுக்கு இல்லாமை கூறப்படுகிறது. ஒரு காலத்தில் மாஸ்கோ கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் படைகள் பற்றி ரஷ்யா குறைத்து மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைனின் நிலப்பரப்பு பற்றி ரஷ்யர்களுக்கு போதிய புரிதல் இல்லை. ஆனால், உக்ரைன் ராணுவம் சேதமடைந்து சகதியான சாலைகளிலும் எளிதாக முன்னேறத் தெரிந்துவைத்துள்ளது. உள்ளூர் மக்களும் தேவைப்படும்போதெல்லாம் ஆயுதம் ஏந்துகின்றனர். தெருச் சண்டைகளை ரஷ்ய படைகள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதை உக்ரைன் ரஷ்யாவுக்கு சவாலாக மாற்றியுள்ளது.
ஒற்றுமைதான் உக்ரைனின் மிகப் பெரிய பலம். இதுவரை ரஷ்யாவை தாக்குப்பிடிக்க 3-வது காரணமாக இது கூறப்படுகிறது. பொதுமக்கள் தாமாகவே முன்வந்து களத்தில் நிற்பது அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வலு சேர்த்துள்ளது.
தவறான திட்டமிடுதல்: ரஷ்யாவின் தவறான திட்டமிடுதல் தான் ஒருமாதமாக உக்ரைன் படைகள் ரஷ்யாவை திறம்பட எதிர்கொள்ளக் காரணம் எனக் கூறப்படுகிறது. முதல் 2 நாட்களில் உக்ரைனுக்குள் ரஷ்யா அனுப்பிய கிரவுன்ட் ட்ரூப்ஸ் அளவு போதாது எனக் கூறப்படுகிறது. மூன்று நாட்களில் படையெடுப்பை முடித்துவிடலாம் என ரஷ்யா நினைத்தது. ஆனால், அவர்களின் ஊகம் கேலிக்கூத்தானது. இப்போது அதை உணர்ந்து ரத்தக் காயங்கள், உயிரிழப்புகளுடன் ரஷ்யப் படைகள் திரும்புகின்றன என நிபுணர்கள் கூறுகின்றன.
உளவியல் சிக்கல்… – போரை தொடங்குவதற்கு முன்னதாகவே எல்லையில் படைகளைக் குவித்து ரஷ்யா உலகுக்கே அச்சத்தைக் காட்டியது. ஆனால், ரஷ்ய ராணுவ அதிகாரிகள் யாரும் உக்ரைனில் இருக்கும் பலரும் ரஷ்ய மொழி பேசக்கூடிய சகோதர பந்தம் கொண்டவர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டனர். இது ரஷ்யப் படைகளின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் பரந்த இலக்கை டான்பாஸோட நிறுத்திக் கொள்ள ரஷ்யா முற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.