லக்னோ,
உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதன்படி, அவர் நேற்று முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்.
இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச அமைச்சரவையின் முதல் கூட்டம் லக்னோ நகரில் இன்று நடந்தது. இதில், மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) இலவச ரேசன் திட்டத்தினை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.
2வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பின்பு யோகி ஆதித்யநாத் எடுக்கும் முதல் முடிவு இதுவாகும். இதனால் 15 கோடி மக்கள் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்தின்படி, ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் கிடைக்கப்பெறும்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதனால், பொருளாதார நெருக்கடி, வருவாயின்மை ஆகியவற்றால் மக்கள் அவதியடைந்தபோது, மத்திய அரசு இந்த திட்டத்தினை முதன்முறையாக அமல்படுத்தியது கவனிக்கத்தக்கது.
உ.பி. தேர்தலின்போது, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள், தேர்தலுக்காகவே இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என பிரசாரத்தின்போது கூறி வந்தது. இதனை தவறாக்கும் வகையில் யோகியின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.