`எங்களுக்கும் வேற வழி தெரியல!' – பண்டலுக்கு ₹50 உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில தீப்பெட்டி உற்பத்திதான் முக்கியமான தொழிலாக உள்ளது. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீப்பெட்டி பண்டல்

இந்தத் தொழிலில் 90% பெண்கள்தான் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இத்தொழில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு தீப்பெட்டியின் விலையை ரூ.2-ஆக உயர்த்தினர். இந்த விலையேற்றம், ஓரளவுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்கத் தொடங்கிவரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 – 40% வரை உயர்ந்துள்ளதால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

தீப்பெட்டு உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம்

நாளுக்கு நாள் மூலப்பொருகள் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளதால், உற்பத்திச் செலவும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தீப்பெட்டியின் விலையை ரூ.2-ஆக உயர்த்தி உள்ள நிலையில் அதனை உயர்த்த முடியாது என்பதால் மூலப்பொருள்களின் விலை உயர்வினைச் சமாளிக்கும் வகையில், தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் ஒரு தீப்பெட்டி பண்டலுக்கு ரூ. 50 விலை உயர்த்திட முடிவு செய்துள்ளனர். 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டலை, தற்போது ரூ.300 என விற்பனை செய்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மொத்த வியாபாரிகளுக்கு ரூ.350-க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த விலை உயர்வினால் சற்று உயர்ந்து மூலப்பொருள்களின் விலைக்கு ஈடு கொடுக்க முடியும் என்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேது ரத்தினத்திடம் பேசினோம். “நாளுக்குநாள் உயர்ந்துவரும் மூலப்பொருள்களின் விலை உயர்வால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூணு மாசத்துல மூலப்பொருட்களோட விலை, 30 முதல் 40 சதவீதம் மூலப்பொருள்களின் விலை உயர்ந்திருக்கு. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான அட்டை 1கிலோ, ரூ.40-ல் இருந்து ரூ.70-ஆக உயர்ந்துள்ளது.

தீப்பெட்டி பண்டல்கள்

குளோரேட் 1 கிலோ, ரூ. 90-ல் இருந்து ரூ.120 ஆகவும், பேப்பர் 1 கிலோ, ரூ. 35-ல் இருந்து ரூ.55 ஆகவும், மெழுகு 1 கிலோ, ரூ.80-ல் இருந்து ரூ.120 ஆகவும், பாஸ்பரஸ் 1 கிலோ, ரூ.550-ல் இருந்து ரூ.900 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினைச் சமாளிக்க தீப்பெட்டி பண்டல்களின் விலையை ரூ.50 உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்களின் விலை உயர்வினை மத்திய, மாநில அரசுகள் தடுக்கவில்லை என்றால் தீப்பெட்டி ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.