திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் வரிசையில் நிற்பவர்களுக்கு உணவு, பால் வழங்க வேண்டும் என்று அறங்காவர் குழு தலைவர் சுப்பா உத்தரவிட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று காலை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா திருமலையில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ரம்பாகீஜா பஸ் நிலையம் அருகே உள்ள அன்ன பிரசாதம் வழங்கும் கவுண்டரில் ஆய்வு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, யாத்திரிகள் சமுதாய கூடத்திற்கு சென்று அங்குள்ள பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற இலவச தரிசன வரிசையை ஆய்வு செய்து பக்தர்களிடம் குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக உள்ளதா? என கேட்டறிந்தார். தரிசனத்திற்கு பக்தர்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பதாக அதிகாரிகளிடம் கேட்டார். காலை நேரத்தில் ஒன்றரை மணி நேரத்திற்குள், மாலை 6 மணிக்கு பிறகு 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வைக்கப்படுவதாக தெரிவித்தனர். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, பால், மோர் ஆகியவை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, விஜிஓ பாலிரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.