பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டை இலங்கை அரசாங்கம் அடுத்த வாரம் 2022 மார்ச் 28-30 வரை கொழும்பில் கலப்பின முறைமையில் நடாத்தவுள்ளது.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் முறையே 2022 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் சந்திப்பு மற்றும் அமைச்சர்கள் சந்திப்பிற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ள அதே வேளை, மியான்மாரின் வெளிநாட்டு அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாகப் பங்கேற்பார்.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களின் மெய்நிகர் பங்கேற்புடன் 2022 மார்ச் 30ஆந் திகதி 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி தலைமை தாங்குவார். இந்த உச்சி மாநாட்டில் மியான்மாரின் வெளிநாட்டு அமைச்சர் மியான்மாரை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
உச்சிமாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் அடைந்து கொண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடுவர்.
இந்த உச்சிமாநாட்டின் போது, பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல சட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படும் என மேலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 மார்ச் 26