மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. எம்.எஸ்.டோனி 50 ரன்னும், உத்தப்பா 28 ரன்னும், ஜடேஜா 26 ரன்னும் எடுத்தனர். டோனி 38 பந்துகளில் அரை சதத்தை பதிவுசெய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
கொல்கத்தா சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 16 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராணா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரகானே 44 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் பொறுப்புடன் ஆடினர். சாம் பில்லிங்ஸ் 25 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவுசெய்தது.