டெல்லி கலவரம்:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து ஒரு தரப்பினரும் கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி வடகிழக்கு பகுதியில் ஊர்வலம் நடத்தினர். அந்த சமயத்தில் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பெரிதாகி கலவரமாக மாறியது. அந்த பகுதிகளிலிருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் துப்பாக்கியால் தாக்கினர். டெல்லி நகரமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. எங்குப் பார்த்தாலும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.
மூன்று நாள்கள் வரை கலவரம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில், டெல்லி வடகிழக்கு பகுதியில் துணை நிலை ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். மோதல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கர்வல்நகர், ஜாப்ராபாத், மவ்ஜிபூர், சந்த்பாக் போன்ற பகுதிகளில் எண்ணற்ற வாகனங்கள் தீக்கிரையாகி இருந்தது. இந்த கலவரத்தில் மட்டும் 53 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கலவரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.
உமர் காலித் கைது:
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, கலவரத்தைத் தூண்டியதாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித்தை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கலவரத்தில் முக்கிய சதியில் ஈடுபட்டவர் என்று காவல்துறையினர் உமரைக் குற்றம் சாட்டினார். உமர் காலித் மட்டுமின்றி, ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக தாஹிர் ஹுசேன், உமர் காலித்தைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. சி.ஏ.ஏ. போராட்டம் நடத்துவது தொடர்பாகச் சந்தித்துப் பேசியபோது மிகப்பெரிய கலவரத்துக்குத் தயாராகும்படி உமர் பேசியதாகவும் டெல்லி காவல்துறை குற்றம் சுமத்தியது. உமர் காலித் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 6 பேருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
`நான் என்ன குற்றம் செய்தேன்?’
இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசியிருந்த உமர் காலித், “காவல்துறையினர் கலவரக்காரர்களை கைது செய்யவில்லை. மாறாக, அரசை விமர்சனம் செய்தவர்களைக் கைது செய்துள்ளது. காவல்துறையினர் முன்னிலையிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை நாங்கள் பார்த்தோம். அவர்களைக் கைது என்ன, விசாரணைக்குக் கூட அழைக்கவில்லை. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராடியவர்கள் மீதும், அரசை விமர்சனம் செய்தவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “பிப்ரவரி 17-ம் தேதி நான் பேசியபோது வன்முறை, கலவரம் என்று எதுவும் பேசவில்லை. நான் சத்தியாகிரகம், அகிம்சை என்று தான் பேசியிருந்தேன். காவல்துறையினர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமதி, பொய்யான சாட்சியங்களைத் தயாரித்து வருகிறார்கள். நான் என்ன குற்றம் செய்தேன். இந்த நாடு என்னுடையதும் தான் உங்களுடையதும் தான் என்று பேசியது குற்றமா?” என்று பேசியிருந்தார்.
மறுக்கப்பட்ட ஜாமீன்:
உமர் காலித்தின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணை டெல்லி கர்கர்தூம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உமர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு சித்தரிக்கப்பட்ட கற்பனையான வழக்கு என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமரின் வாட்ஸ்அப் செய்திகள் ஆதாரமாக இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கு உமர் தரப்பு வழக்கறிஞர் அந்த வாட்ஸ் அப் குழுவில் உமர் மொத்தமாகவே நான்கு மெசேஜ் மட்டுமே அனுப்பியிருப்பதாகத் தகவல் தெரிவித்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் 6 பேருக்கு மட்டுமே ஜாமின் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.