நீதிபதிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் கேரள உயர் நீதிமன்ற அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை உயர் நீதிமன்ற அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளுக்கு இடையே 20 ஓவர் நட்புறவு கிரிக்கெட் போட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேரளா நீதிபதிகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை கேரள அணி எடுத்திருந்தது. அதிகபட்சமாக நீதிபதி ராஜா விஜயராகவன் 30 ரன்களை எடுத்திருந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தரப்பில் பந்து வீசிய நீதிபதி அப்துல் குத்தூஸ் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், பேட்டிங் செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 106 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் அதிகபட்ச ஸ்கோரான 27 ரன்களை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் எடுத்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையில் சென்னை அணியும், கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையிலான கேரள அணியும் விளையாடின.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM