புதுடெல்லி:
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது.
இதைத்தொடர்ந்து அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை மீண்டும் விமர்சிக்க தொடங்கினர். சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
இதைத்தொடர்ந்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சோனியா ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் தேர்தல் குழுவை மாற்றிவிட்டு புதிய குழுவை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
மேலும் காங்கிரஸ் அமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அதிருப்தி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் கட்சியின் அமைப்புகளில் மாற்றம் செய்வது குறித்து காங்கிரஸ் செயலாளர்களுடன் சோனியா காந்தி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரிப்பு உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
இமாச்சலபிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் கோஷ்டி மோதல்களை நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்தும்.