முந்தைய இதழில் நாம் பார்த்தது தொழில்நுட்பம் என்றால், இப்போது பார்க்கவிருப்பது அறிவியல். தருமபுரியின் அரூரில் இருக்கும் வேலம்பட்டி கிராமத்தில், Molybdenum எனும் கனிமத்தை GSI (Geographical Survey of India) கண்டுபிடித்திருக்கிறது. இதன் அளவு 6 மில்லியன் டன். இந்தியாவில் மொத்தமே 18 மில்லியன் டன்தான் Molybdenum கிடைக்கிறது. அதில், 6 மில்லியன் டன் தருமபுரியில் மட்டும். இதை நன்கு உணர்ந்த அரூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் டில்லிபாபு, “Molybdenum வெட்டியடிப்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா…” என்று, 2015-ம் ஆண்டு நடந்த சட்டமன்றக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் தங்கமணியிடம் கேட்டார். அதற்கு தங்கமணி, “வேலம்பட்டி Molybdenum குறித்து 1983 – 2003 ஆண்டுகளில் GSI ஆய்வுசெய்து, 1.2 கிலோமீட்டர் தொலைவுக்கு 320 மீட்டர் ஆழத்தில் தடயங்களைக் கண்டுபிடித்தது. ஆனால், இந்தத் தடயங்கள் வெட்டி எடுக்கும் அளவுக்கானதாக இல்லை” என்று பதில் சொன்னார். ஆனால், அதற்குப் பிறகே GSI வேலம்பட்டியில் விரிவான இன்னோர் ஆய்வை மேற்கொண்டு 6 மில்லியன் டன் Molybdenum Reserve இருப்பதைக் கண்டறிந்து சொன்னது. ஆனாலும், அப்போதைய மாநில அரசுக்கு Molybdenum குறித்த பெரிய ஆர்வமோ, நம்பிக்கையோ இல்லை. பிறகு, Bureaucracy சிக்கல்கள். ‘ஒன்றிய அரசிடம் தெளிவான கொள்கை இல்லை, மாநில அரசு ஏலம் கோர முன்வரவில்லை’ என நாள்கள் கடந்தன. இன்று 2022-ல் நிற்கிறோம். இப்போது வரை Molybdenum குறித்த எந்தத் தெளிவான முன்னெடுப்புமே இரண்டு தரப்பிடமிருந்தும் இல்லை.
தருமபுரியின் கனிமப் புதையல்!
மொத்தத்தில், தருமபுரியின் ஒரு சிறிய கிராமத்தில் புதையலைப்போல 6 மில்லியன் டன் Molybdenum எனும் கனிமம் இயற்கையால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மாநில அரசும், ஒன்றிய அரசும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதனால், மிகப்பெரிய ஒரு வளத்தின் பயன் தமிழ்நாட்டின் மிகப் பின்தங்கிய மாவட்டம் ஒன்றுக்குச் சென்று சேராமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பை இனிமேலேனும் அனைவரும் சேர்ந்து உடைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுத் தகவல்களின்படி, Molybdenum அதீதமான வெப்பம் தாங்கும் சக்தியையும், எளிதில் அரிப்புக்கு உள்ளாகாத தன்மையையும் கொண்டது. ராணுவத் தளவாடங்கள், விமான பாகங்கள், Electrical Contact, Industrial Motor ஆகிய துறைகளில் Molybdenum பயன்படுத்தப்படுகிறது. அணு உலை ரியாக்டர்களிலும் Molybdenum பயன்படுத்துகிறார்கள். இதெல்லாமே ராட்சசத் துறைகள். இதில், சிறிய குண்டூசி அளவு பொருளுக்குக்கூட உயர்ந்த மதிப்பு உண்டு. தரவின் பின்னணியில் சொன்னால், இந்தியாவே ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு Molybdenum கனிமத்தை சிலி, தாய்லாந்து, துருக்கி, நெதர்லாந்து மற்றும் UAE ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதிதான் செய்கிறது!
இனி செய்யவேண்டியது ஒன்றே. Bureaucracy சிக்கல்களைக் களைந்துவிட்டு, ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து Molybdenum சுரங்கத்தை வேலம்பட்டி பகுதியில் தொடங்குவதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக அந்தப் பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு, அவர்களுக்கு மாற்று இடம் மற்றும் நிவாரணம் ஆகியவற்றை முறையாக அளிப்பது பற்றியும் தெளிவாகத் திட்டமிட வேண்டும். முக்கியமாக, சுரங்கப் பணிகளில் தருமபுரி சுற்றுவட்டார மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவாதத்தையும் வெளியிட வேண்டும். இதெல்லாம் போர்க்கால வேகத்தில் நடந்தால், கடலூருக்கு ஒரு NLC-யைப்போல, சேலத்துக்கு ஓர் இரும்பாலையைப்போல, Molybdenum தருமபுரிக்கு ஒரு நிரந்தரப் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அடையாளமாக மாறும்!
கூட்டுறவுக் காடுகள்!
தருமபுரிக்கான என் அடுத்த திட்டம், சூழலியல் மேம்பாட்டுக்கான கூட்டுறவுக் காடுகள் (Co operative Forest) எனும் திட்டம். இந்தத் திட்டத்துக்கான உந்துதலை அளித்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ். இவர் 2009-ம் ஆண்டு தருமபுரியில் 150 ஏக்கர் நிலத்தைத் தேர்ந்தெடுத்து, இயற்கைக் காடாக உருவாக்கும் பணியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் பலரும் “தருமபுரி தரிசு மண்ணில் இயற்கைக் காடா? வானம் ஏறி வைகுண்டம் பார்க்கும் வேலை” என்று சலித்துக்கொண்டார்கள். ஆனால், இன்று அந்த 150 ஏக்கரை 250 ஏக்கராக விரிவுபடுத்தி 30 வகையான மரங்கள் நிறைந்த பெருங்காடாக உருவாக்கி நிறுத்தியிருக்கிறார், பியூஸ். இதற்கு அவருக்குத் தேவைப்பட்டது 25 லட்சம் ரூபாய் முதலீடும், 10 ஆண்டு இடைவிடாத உழைப்பும் மட்டுமே. இங்கேதான் பியூஸின் கூட்டுறவுக் காடு திட்டம் எனக்குத் தருமபுரி முழுமைக்கும் பயன்படும் வாய்ப்புள்ளதாகத் தோன்றியது. ஏனென்றால், தருமபுரியின் பெரும்பாலான நிலங்கள் பியூஸ் தேர்ந்தெடுத்ததைப் போன்ற மேட்டுக்காட்டு நிலங்கள்தான். என் ஆய்வின் படி, தருமபுரியில் 40,000+ ஏக்கர் பரப்புக்குக் கூட்டுறவுக் காடுகளை உருவாக்க முடியும். இது நடந்தால் தண்ணீருக்காக கர்நாடகாவின் மதகுகளைப் பார்த்து நின்றிருக்கும் அவலநிலையும் தருமபுரி மக்களுக்கு ஏற்படாது. ஆனால், இதற்கு பியூஸுக்கு அரசு உதவ வேண்டும். நான் கேட்டபோது “தருமபுரி முழுமைக்கும் மனப்பூர்வமாகச் செய்வேன்” என்று பதில் சொன்னார் பியூஸ்.
கூட்டுறவுக் காடுகளின் மூலம் சூழலியலைக் காத்து, நிலத்தடி நீர்மட்டத்தை மட்டும் உயர்த்தவில்லை பியூஸ். கூடவே, கூட்டுறவுக் காடுகளில் விளையும் பழங்கள் மற்றும் மரங்களை மதிப்புக்கூட்டுப் பொருளாகவும் மாற்றி வருமானத்தை உருவாக்குகிறார். இந்தப் பொறுப்பை பியூஸின் மனைவி மோனிகா கவனித்துக்கொள்கிறார். அவர், மூங்கில், கற்றாழை தொடர்பான மதிப்புக்கூட்டுப் பொருள்களை உருவாக்கிச் சந்தைப்படுத்துகிறார். சிந்தித்துப் பார்க்கையில், இதுவும் நல்லதொரு தொழில்முனைவு வாய்ப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. முக்கியமாக, தருமபுரி பெண்களுக்கு! தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழு கலைஞரால் தருமபுரியில்தான் தொடங்கப்பட்டது. என் நினைவு சரியாக இருந்தால், அந்த ஆண்டு 1989. பெயர்கூட மாரியம்மன் மகளிர் சுய உதவிக்குழு! இன்றும் இந்த மகளிர் சுய உதவிக்குழு பாரம்பர்யத்தின் வேர் தருமபுரியில் வலுவானதாக இருக்கிறது. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கூட்டுறவுக் காடு சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள் உருவாக்கத்துக்கு மடை மாற்றலாம். இப்படி மடை மாற்றினால், 40,000 ஏக்கர் கூட்டுறவுக் காடுகளிலிருந்து பல கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தை உண்டாக்க முடியும். சிறிய அளவு முயற்சிதான். அரசு முன்வந்தால் மிகப்பெரிய மகளிர் தொழில்முனைவு அலையைத் தருமபுரியில் உருவாக்க முடியும்.
தருமபுரி தட்டுவடை!
அடுத்து நான் சொல்லப்போவதும் தருமபுரி மாவட்டத்தை மொத்தமாகத் தொடர்புபடுத்தக் கூடியதுதான். அது ‘நிப்பெட்.’ தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் தட்டுவடை, எள்ளடை, தட்டைவடை என்று சொல்வதைத்தான் தருமபுரியில் `நிப்பெட்’ என்கிறார்கள். இனி நம் அனைவருக்கும் புரியும் வகையில் தட்டுவடை என்றே தொடர்வோம். இந்தத் தட்டுவடையை பிடமனேரி, காரிமங்கலம், குமாரசாமிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் கணிசமாகவும் தயாரிக்கிறார்கள். பெரும்பாலும் குடிசைத்தொழில் போன்ற தயாரிப்பு முறைதான். ஆனாலும், பல்லாயிரம் பேர் தட்டுவடைத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தட்டுவடை தருமபுரி கடந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது. இங்கே நான் என்ன புதிய மாற்றத்தை முன்னிறுத்தப்போகிறேன் என்பது என்னைச் சரியாகப் பின்தொடர்பவர்களுக்குத் தெரியும். அதேதான்… Packaging & Promoting!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பான உணவுப்பொருள் இருக்கும். திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரூன் என்று செல்லும் அந்த வரிசையில், தருமபுரி தட்டுவடையை நாம் Position செய்ய வேண்டும். சமீபத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை கொண்டாடிய #FoodFebruary முன்னெடுப்பில்கூட, தருமபுரி தட்டுவடைக்கு என்று எந்த இடமும் இல்லை. அடுத்த ஆண்டு இப்படியிருக்கக் கூடாது. தைரியமாக தருமபுரி தட்டுவடையைத் தமிழ்நாட்டின் சிறப்பான உணவுப்பொருள்களில் ஒன்றாக முன்னிறுத்த வேண்டும். இதற்கு அடுத்து தருமபுரி தட்டுவடைக்கான புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளையும் தொடங்கலாம். இது தருமபுரி தட்டுவடையைத் தலைப்புச் செய்திகளில் இடம்பெறச்செய்து பல்வேறு மாவட்ட மக்களின் மனதிலும் நிறுத்தும். அடுத்ததாக, தருமபுரி தட்டுவடையை Lay’s, Kurkure போன்ற நிறுவனங்களின் Snacks போல Brand செய்ய வேண்டும்.
நீங்கள் அறிவீர்களா? அண்மையில், Lay’s நிறுவனம் நம்மூர் அப்பளத்தையே பாக்கெட் போட்டு விற்கத் தொடங்கிவிட்டது. பெயர்கூட, Lay’s Wafer Style. இவர்கள் இத்தனை புத்திசாலியாக இருக்கும்போது, நாம் மட்டும் ஏன் முட்டாளாக இருக்க வேண்டும்?! போதாக்குறைக்கு, Lay’s, Kurkure மீது உடல்நலன் சார்ந்த புகார்களும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான், தருமபுரி தட்டுவடை போன்ற Regional Foods-ஐ நாம் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லவேண்டியதாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், ‘மீண்டும் மஞ்சப்பை’ என்றோர் இயக்கத்தைத் தொடங்கினார். அதன் உள்ளார்ந்த அர்த்தம், நம் பிராந்தியம் சார்ந்த ஒரு பொருளுக்கு மதிப்பை ஏற்படுத்துவோம் என்பதே. அதேபோலவே, நம் தமிழ்நாட்டு உணவுப்பொருள்களுக்கும் நாம் ஒரு மக்கள் இயக்கத்தைத் தொடங்கவேண்டியிருக்கிறது. அதை தருமபுரியின் தட்டுவடையிலிருந்து தொடங்குவோம். இதுவும் சரியாக நடந்தால், தருமபுரியில் Inclusive-ஆக பல்லாயிரம் பேர் நல்ல மதிப்பான வேலைவாய்ப்பும், நிரந்தர வருமானமும் பெறுவார்கள்!
(இன்னும் காண்போம்)