பெங்களூரு: கர்நாடகாவில் உடுப்பி, ஷிமோகா, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ யு.டி.காதர் பேசுகையில். “கோயில் திருவிழாக்களிலும், கோயில் இடத்திலும் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருகின்றனர். முஸ்லிம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இந்த சதிச் செயலை அரசு தடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, “கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் வைக்க எவ்வித தடையும் இல்லை. ஆனால் இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்து அல்லாதவர்கள் கடைகள் வைக்க அனுமதி கிடையாது. ஏனெனில் கடந்த 2002-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது இந்து கோயில் நிலத்தில் இந்து அல்லாத முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் கடைகள் வைக்க அனுமதி இல்லை என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை பாஜக கொண்டுவரவில்லை’’ என்று தெரிவித்தார்.