உணவு, எரிபொருட்களை தொடர்ந்து மருந்துகளின் விலையும் 10 சதவிகிதம் உயர இருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மளிகை பொருட்களை போல மாதாந்திர பட்ஜெட்டில், மருந்து மாத்திரைகளை பட்டியலிடும் குடும்பங்கள் பல நம்நாட்டில் உள்ளன. அதிலும், முதியோர்கள் உள்ள குடும்பங்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மருந்துகளுக்காக செலவிட வேண்டிய சூழல் உள்ளது. அத்தகையோரின் பட்ஜெட்டில் அடுத்த மாதம் முதல் துண்டு விழ செய்ய போகிறது மருந்துகளின் விலை உயர்வு.
குறிப்பாக, 10.77 சதவிகிதம் வரை விலையை உயர்த்திக்கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 850 மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, காய்ச்சல், இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, தோல் நோய், வலி மற்றும் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளின் விலை 10 சதவிகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானிய குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருந்து வாங்க வேண்டும் என்றால் இனிமேல் அதற்கு கூடுதலாக 300 ரூபாய் செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM