கிரெனடா:
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா சதமடித்து அவுட்டாகாமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன், சாகிப் மகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
93 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அசத்தலாக பந்து வீச, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 31 ரன், பேர்ஸ்டோவ் 22 ரன் என இரட்டை இலக்கை தாண்டினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர்.
மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை விட 10 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்னும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெஸ்ட் இண்டீஸ் இந்த டெஸ்டில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.