சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளால் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி தலைமைப்பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், கோவை யில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக – திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் திமுக கவுன்சிலர் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மற்றொரு இடத்தில் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சியில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மறைமுக வாக்குபதிவின்போது, பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வாக்குப்பெட்டி உடைத்து எறியப்பட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ளலூரில் மொத்தமுள்ள 15 வார்டில் திமுக – 6, அதிமுக – 8, சுயேட்சை – 1 வார்டுகளில் வென்றுள்ள நிலையில், இன்று வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிமுக கவுன்சிலர்கள் அதிகம் உள்ள நிலையில், திமுக பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே அடி தடி ஏற்பட்டு கலவரமானது. இந்த மோதலின்போது மதுக்கரை 4-ஆவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரின் மண்டை உடைந்தது. மோதலை தடுக்க போலீசாரின் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்.
அதுபோல, கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 4வது வார்டு திமுக உறுப்பினரின் கணவருக்கு அரிவாள் வெட்டு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவருக்கான இன்று மறைமுக தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து திமுக நகர செயலாளர் முருகன் தனது மருமகளை நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 3 பேரூராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை அதிமுக வசப்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, நங்கவள்ளி, வனவாசி ஆகிய 3 பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. சேலம் அருகே நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
அதன்படி, நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் மாணிக்கம், வனவாசி பேரூராட்சியின் தலைவர் ஞானசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அதிமுக வேட்பாளர் ஞானசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதுபோன்று, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட சிபிஎம் வேட்பாளர் கீதாவிற்கு வழிமொழிய, முன்மொழிய யாரும் வராததால் போட்டி வேட்பாளர் திமுகவை சேர்ந்த பாண்டியம்மாள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது…