சிட்னி-சாலமன் தீவுகளில், சீனா ராணுவ தளம் அமைக்க உள்ளதாக வெளியான தகவல், ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை, சீனா வழக்கமாக வைத்துள்ளது. கடந்த மாதம், ஆஸ்திரேலிய கடல் பகுதிக்குள், சீன கடற்படையைச் சேர்ந்த கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்தது.அதோடு, ஆஸ்திரேலிய கடற்படையின் கண்காணிப்பு விமானத்தின் மீது, ‘லேசர்’ ஒளியை பாய்ச்சியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான சாலமன் தீவுகளில், சீனா பிரத்யேக ராணுவ தளத்தை கட்டமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, சீனா – சாலமன் தீவுகளுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் வரைவு ஆவணங்கள் கசிந்து உள்ளன. சீனாவின் இந்த முடிவு, ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, ஆஸ்திரேலிய ராணுவ அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியதாவது:அண்டை நாடான சாலமன் தீவுகளில், சீனா ராணுவ தளத்தை கட்டமைத்தால், அது ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எங்கள் கவலை மற்றும் எதிர்ப்பை, சாலமன் தீவுகளிடம் தெரிவிப்போம்.இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அமைதியை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளையும் எங்களால் ஏற்க முடியாது. சீனாவால் தரப்படும் நெருக்கடிகளை நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement