சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறைக் கருத்து அல்ல! அது குற்றமும் அல்ல! என டெல்லி கலவரம் தொடர்பான வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24, 2020 அன்று வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன, குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான கட்டுப்பாட்டை மீறி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக எம்பியுமான பிரவேஷ் வர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரிய முந்தைய மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக எம்.பியுமான பிரவேஷ் வர்மா ஆகியோரின் பேச்சுக்களில் வகுப்புவாதம் என்ன இருக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘யே லாக்’ (இவர்கள்) யாரைக் குறிக்கிறது? ‘ye log’ என்பது குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கிறது என்பதை நீங்கள் எவ்வாறு முடிவு செய்தீர்கள்? இது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் அல்ல, அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நேரடி தூண்டுதல் இந்த வார்த்தையில் எங்கே இருக்கிறது? என நீதிபதி சந்திர தாரி சிங் கேள்வி எழுப்பினார்.
“அது ஒரு தேர்தல் உரையா அல்லது சாதாரண நேரத்தில் ஆற்றப்பட்ட உரையா? தேர்தலின் போது ஏதாவது பேச்சு பேசினால் அது வேறு விஷயம். நீங்கள் சாதாரண போக்கில் பேசுகிறீர்கள் என்றால், அது எதையாவது தூண்டினால் குற்றம். நீங்கள் புன்னகையுடன் எதையாவது சொன்னால் குற்றமில்லை, புண்படுத்தும் வகையில் ஏதாவது சொன்னால், குற்றமாகும்” என்று நீதிபதி சந்திர தாரி சிங் கூறினார். காரத் மற்றும் டெல்லி போலீஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்றம், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது. இரு தலைவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM