புதுடெல்லி: இந்தியா நடப்பு நிதி ஆண்டில் ரூ.42,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் இந்தியா ரூ.23,000 கோடி அளவில்ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது.
பல்வேறு காரணங்களால் செமி கண்டக்டருக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டுநிதி ஆண்டில் ரூ.1300 கோடிஅளவில் இந்தியா ஸ்மார்ட்போன் களை ஏற்றுமதி செய்தது. ஆனால் அதற்கடுத்த 2018-19-ம்ஆண்டு அது ரூ.11,200 கோடியாகவும், 2019-20-ல் ரூ.27,200 கோடியாகவும் உயர்ந்தது.
கரோனாவால் பாதிப்பு
கரோனா காரணமாக சர்வதேச அளவில் கொண்டுவரப்பட்டபோக்குவரத்துக் கட்டுப்பாடு காரணமாக, 2020-21-ல் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி ரூ.23,000 கோடியாக குறைந்தது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில்ஏற்றுமதி 83 சதவீதம் உயர்ந்து ரூ.42,000 கோடியாக உள்ளது.
இது தொடர்பாக இந்தியசெல்லுலார் மற்றும் மின்னணுவியல் சங்கத்தின் தலைவர் பஞ்கஜ் மொஹிந்தரோ கூறுகையில், ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாக விநியோகச் சங்கிலியில் கடும்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமிகண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலையின்போது பல இடங்களில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டதால், தொழிலாளர்கள் வேலைக்கு வருவது குறைந்தது.இந்தச் சவால்களை எல்லாம்கடந்து இந்தியா அதன் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.
முன்னதாக, தெற்கு ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துவந்தது. தற்போது வளர்ந்த நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகிறது. அந்த அளவுக்கு இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.