தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்: முதல்வர் அழைப்பு| Dinamalar

துபாய்: தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் துபாய் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1,600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 3 நிறுவனங்களுடன் கையெழுத்தானது.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில். தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியன ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. துபாயை வெளிநாடாக நினைக்கமுடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். தமிழகம்- துபாய் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகின் அழகான நகரமான துபாய் நகரம் வணிகத்திலும்,தொழில்நுட்ப வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது. ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபாய் திகழ்கிறது.

தமிழகத்தில் துபாய் நிறுவனங்கள் தொழில் நடத்த ஏற்ற சூழல் நிலவுகிறது. இங்கு பெரிய கொள்ளளவு கொண்ட தூத்துக்குடி துறைமுகம் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பர்னீச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டி அமைப்பு உள்ளது. தொழில் , ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உலகஅளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழகத்தை மாற்றுவதே எங்களின் இலக்கு. எனவே வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம். இணைந்து வளர்ச்சி பெறுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.