புதுடில்லி,:”பார்லிமென்டில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்,” என, தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார்.
சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, டில்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா பேசியதாவது:நாட்டின் முதல் லோக்சபாவில், 15 பெண் எம்.பி.,க்கள் இருந்தனர். தற்போது, 78 பெண்கள் எம்.பி.,க்களாக உள்ளனர். ஆனால், இது போதாது. பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, பல சிறந்த பெண் தலைவர்கள் உருவாகியுள்ளனர். எம்.பி., – எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் அதிக தொடர்பில் இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், ஓட்டு அளிக்கும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்று வதில் பெண்கள் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில், உத்தர பிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில், ஆண்களை விட பெண்களே அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement