தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. கோவை வெள்ளலூர் பேரூராட்சி, மதுரை திருமங்கலம் நகராட்சியில் தேர்தலின் போது இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால், காவல்துறையினர் அனைவரையும் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி மன்ற தலைவராக கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர் காஞ்சனா சுதாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி மற்றும் உதயேந்திரம் பேரூராட்சியின் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றனர். சேலம் மாவட்டம் நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளை அதிமுக கைப்பற்றிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி தலைவராக பாஜக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அவரை யாரும் முன் மொழியததால் திமுக வேட்பாளர் பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தலின் போது இருவேறு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அனைவரையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில், 3 பேர் காயமடைந்த நிலையில், ஒரு கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
அதேபோல், மதுரை திருமங்கலம் நகராட்சியின் மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வேட்பாளர்கள் வாக்களித்ததால் தேர்தலை புறக்கணிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி, தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்காததால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதேப்போல், திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக உறுப்பினர்கள் யாரும் பங்கேற்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது