நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சென்ற வருடம்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். கல்லூரியில், முதல் வருடத்திலிருந்து இறுதி வருடம்தான் நான்கு வருடங்களாக நானும் அவனும் காதலித்து வந்தோம். இப்போது நான், காதலன், நண்பன் என ஒருவருக்கொருவர் ஈகோவால் பிரிந்து கிடப்பதுதான் என் பிரச்னை.
பள்ளிப் பருவத்தில் இருந்து எனக்கு நண்பன் அவன். அவனும் நானும் ஒரே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, பொறியியலில் சேர்ந்தோம். கல்லூரியில், எங்களுக்கு வகுப்புத் தோழனாக அறிமுகமாகி, பின்னர் எங்கள் இருவர் கூட்டணியில் மூன்றாவதாக இணைந்தவன்தான், பின்னாளில் என் காதலன் ஆனான்.
நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தது, தொடக்கத்தில் என் நண்பனுக்குப் பிடிக்கவில்லை. `இப்போயெல்லாம் நீ என்கூட அதிக நேரம் ஸ்பெண்ட் பண்ணுறதே இல்ல’ என்பதில் ஆரம்பித்து, `எல்லா படத்துக்கும் என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போயிடுறீங்க’ வரை, எங்கள் இருவரிடமும் உரிமையுடன் கோபப்பட்டுக்கொண்டே இருப்பான். நான் மட்டுமல்ல, என் காதலனும் அவனது நட்பின் பொசஸிவ்னெஸ்ஸை புரிந்துகொண்டு, அவன் கோபத்தை பொருட்படுத்தமாட்டோம்.
இந்நிலையில், என் காதலனுக்கும் நண்பனுக்கும் ஒரு ஈகோ பிரச்னை ஏற்பட்டது. என் காதலனின் தோழிக்கு என் நண்பன் லவ் புரொப்போஸ் செய்தான். அதை அந்தப் பெண் ஒரு புகாராக சென்று என் காதலனிடம் சொல்ல, அவன் வந்து நண்பனைக் கண்டித்தான். `என் ஃப்ரெண்டை நீ லவ் பண்ணும்போது, உன் ஃப்ரெண்டை நான் லவ் பண்ணக் கூடாதா?’ என்று இவன் கேட்க, `உன் ஃப்ரெண்ட் என்னை லவ் பண்ணுறா. ஆனா, என் ஃப்ரெண்ட் உன்னை லவ் பண்ணலையே, எங்கிட்ட வந்து உன்னை கம்ப்ளெயின்ட்தானே பண்ணியிருக்கா…’ என்று சொன்னதோடு அவன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. `ஒரு பொண்ணு உன்னை லவ் பண்ணனும்னா அதுக்கு ஒரு தகுதி வேணும். அதனாலதானே அத்தனை வருஷம் உன் ஃப்ரெண்டா இருந்தும், அவ என்னை லவ் பண்ணினா?’ என்று பேசியது என் நண்பனுக்கு மட்டுமல்ல, எனக்கும் அதிகக் கோபமாகிவிட்டது.
`நாங்க ப்யூர் ஃப்ரெண்ட்ஸ். நீ எங்க நட்பை கொச்சைப்படுத்தினது மட்டுமில்லாம, என் ஃப்ரெண்டையும் ஹர்ட் பண்ணிட்ட’ என்று நான் என் காதலனுடன் பயங்கரமாகச் சண்டை போட்டேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு, என் நண்பன் என் காதலனிடம் பேசுவதை நிறுத்துவிட்டான். இதற்கிடையில் எங்கள் கல்லூரிப் படிப்பும் முடிய, எங்கள் நகரத்திலேயே எங்கள் மூவருக்கும் வேறு வேறு அலுவலகங்களில் பணி கிடைத்து வேலைபார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இன்னொரு பக்கம், என் நண்பன் தான் புரொப்போஸ் செய்த பெண்ணுக்காக ஒரு வருடமாகக் காத்திருந்து, இறுதியாக அவள் அன்பையும் பெற்றுவிட்டான். இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அது என் காதலனுக்குப் பிடிக்காமல் போக, அவன் அவளுடன் பேசுவதை நிறுத்துவிட்டான். அப்படியும் அவனுக்கு ஈகோ திருப்தியடையாமல், `நீ இனி உன் ஃப்ரெண்ட் கூட பேசக்கூடாது. நானா அவனானு யோசிச்சுக்கோ’ என்கிறான்.
இது எப்படி நியாயம் ஆகும்? இவன் காதலன் ஆவதற்கு முன்னரே அவன் எனக்கு நண்பன். மேலும், இவள் தோழியை என் நண்பன் காதலிப்பது இவனுக்கு ஏன் ஈகோ பிரச்னை ஆக வேண்டும்? இந்தப் பிரச்னை பற்றி நான் என் நண்பனிடம் சொன்னபோது, `என் ஃப்ரெண்டை அவன் லவ் பண்ணினப்போ, எனக்கும் சின்ன சின்ன பொசஸிவ்னெஸ் இருந்தாலும் வெறுப்பு இல்லை. ஆனா, அவன் ஏன் என்னை இப்படி வெறுக்கிறான்? அவன் கோர் (core) கேரக்டரே எனக்கு சரியாபடலை. நீ உன் காதலை மறுபரிசீலனை பண்ணணுமோனு எனக்குத் தோணுது’ என்று என்னை மேலும் குழப்பிவிட்டான்.
காதலன், நண்பன், நான்… நல் உறவில் இருக்க வழி என்ன?