நெல்லை மாவட்டம், ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்துப் பகுதியில் ஜல்சக்தி மிஷன் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்ததாக போலியாக பிஸ் போட்டு அரசு ஒப்பந்ததாரரின் பெயரில் 17 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக முதல்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து பஞ்சாயத்துச் செயலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் நெருக்கடி காரணமாக இது போல போலியாக பில் போடப்பட்டு முறைகேடாக பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இந்த புகார் தொடர்பாக அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்ததால் ராதாபுரம் யூனியன் பொறியாளரான சந்தோஷ்குமார் என்பவர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரமும் அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.,
ராதாபுரம் வட்டாரத்தில் ஜல்சக்தி மிஷன் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துறைரீதியாக விசாரணை நடத்துமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை உதவி இயக்குநர் சுமதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடந்தது.
விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரின் வழங்கப்பட்டது. அதில், ராதாபுரம் வட்டாரப் பகுதியில் இது போல மேலும் பல முறைகேடுகள் நடந்திருப்பது குறித்தும் முழுமையான விவரங்கள் தெரியவந்துள்ளது. அதனால் அப்போது ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிய லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதற்கான அதிரடி உத்தரவை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பிறப்பித்தார்.