சென்னை:
பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியாற்ற வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தர கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
எனவே, தங்கள் கோரிக்கை குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா? என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் அளித்த விளக்கம் அவர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
முதன்மை செயலர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘பகுதிநேர ஆசிரியர்களைப் பொருத்தவரை அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்று பணி நியமனத்தின்போது அந்த ஆணையில் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். எனவே, இவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது’ என்று தெரிவித்திருக்கிறார்.
பகுதி நேர ஆசிரியர்கள் தேவையில்லை என அரசு கருதினால் உடனடியாக எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தையும் அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். செய்தியாளர் சந்திப்பின்போதும்கூட முதல்வர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கூறினார். ஆனால், அந்த துறையின் முதன்மை செயலாளர் இதற்கு நேர்மாறான கருத்தை கூறியிருக்கிறார்.
முதல்வர் முடிவு எடுப்பார் என அமைச்சர் கூறுவதும், வாய்ப்பு இல்லை என செயலாளர் கூறுவதும் முரண்பாடாக இருபப்தாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.