தன்னுடன் பயிலும் மாணவர்கள் பாலியல் தொந்தரவு அளிக்கிறார்கள் என்று சென்னை ஐஐடியில் பயிலும் பட்டியலின மாணவியின் புகாருக்கு ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி 2017 முதல் சென்னை ஐஐடி வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் 3 பேரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக சம்பந்தப்பட்ட தனது துறை பேராசிரியரிடம் புகாரளித்துள்ளார். சாதிய ரீதியாக அப்பெண்ணைக் இழிவுபடுத்தி இப்பிரச்னையைக் கண்டுகொள்ளவில்லை அந்த மாணவி தரப்பில் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இதே மாணவர்கள் மீண்டும் மீண்டும் அப்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளதாகவும், இதனால் உளவியல் ரீதியாக கடும் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் இப்பெண், 2020-ல் ஐஐடி உள்புகார் கமிட்டியில் அவர்கள் மீது புகார் மனு அளித்தார். அதையடுத்து இந்த புகார் மீதான அறிக்கையை ஐஐடி நிர்வாகத்தில் கமிட்டி சமர்ப்பித்திருந்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமலேயே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான இப்பெண் 3 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ”இந்த விவகாரம் CCASH (பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார்கள் குழு) விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
மாணவியின் கூற்றுப்படி, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள், ஆகஸ்ட் 2020 இல் ஐஐடி மெட்ராஸின் கவனத்திற்கு கொண்டு வந்தன. நிறுவனம் உடனடியாக இந்த விஷயத்தை CCASH க்கு விசாரணைக்கு அனுப்பியது. விசாரணை அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம். அவரது உதவித்தொகை காலம் முடிவடைந்த பின்னரும் கூட, வெளி விசாரணையின் போது, நிறுவனம் அவருக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளது.
மாணவி தொடர்ந்து வளாகத்தில் தங்கி இருக்கிறார். மேலும் அவர் தனது பட்டப்படிப்பை முடிக்க தேவையான அனைத்து ஆதரவையும் நிறுவனம் வழங்குகிறது.நாங்கள் அந்த மாணவியிடம் அனுதாபம் கொள்கிறோம். இதன் மூலம், அவருக்கு ஆதரவளிப்போம். பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை எழுப்பிய மாணவியின் விவகாரத்தை விசாரிப்பதற்கான அனைத்து செயல்முறைகளையும் ஐஐடி மெட்ராஸ் பின்பற்றியுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
