இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாதில் நாளை (மார்ச்.27) நடக்கும் பொதுக் கூட்டத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப், தனிப்பெரும் கட்சியானது. இதையடுத்து, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த இம்ரான், நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, இம்ரான் அரசு மீது, முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் இருந்து மூன்று கட்சிகள் வெளியேறின. இம்ரானின் கட்சியிலேயே, அவருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள 24 எம்.பி.,க்கள், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், இம்ரான் ஆட்சி கவிழ்வது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் நாளை (மார்ச்.27) நடைபெறும் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் பொதுக் கூட்டத்தில், இம்ரான் கான் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Advertisement